இதுக்குறித்து தமிழ முதல்வரும், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களவை முன்னாள் தலைவரான பி.ஏ. சங்மா, குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். கடிதம் மூலமாகவும், கடந்த 15-ம் தேதி என்னை நேரிலும் சந்தித்து அவர் ஆதரவு கோரினார். இதுதொடர்பாக, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடமும் விவாதித்தேன்.
இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ. சங்மாவுக்கு ஆதரவளிக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகியும், பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இதுவரை குடியரசுத் தலைவர் ஆனதில்லை.
பி.ஏ. சங்மா பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தகுதியும் திறமையும் படைத்தவர். எனவே, குடியரசுத் தலைவர் தேர்தலில் அவருக்கு ஆதரவு அளிப்பதில் அ.தி.மு.க. பெருமை கொள்கிறது’ என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நவீன் பட்நாயக் கூறுகையில், ‘ஒடிசா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் நான்கில் ஒரு பங்கு உள்ளனர். எனவே, சங்மா போன்ற ஒரு பழங்குடியினத் தலைவரை ஆதரிப்பது பொருத்தம் எனக் கருதுகிறோம்’ என்றார்.
முன்னதாக, வியாழக்கிழமை காலை சங்மாவின் மகளும் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சருமான அகதா சங்மா, நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். சில நாள்களுக்கு முன் பி.ஏ. சங்மாவும் அகதாவும் ஜெயலலிதாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜெயலலிதாவுக்கும் நவீன் பட்நாயக்குக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பி.ஏ. சங்மா கூறியுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பி.ஏ. சங்மா சார்ந்துள்ள தேசியவாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எங்களிடம் சங்மா ஏதும் பேசவில்லை. குறைந்த அளவே பலமுள்ள நிலையில் இதுபோன்ற மிக உயர்ந்த பதவிகளுக்கு நாம் ஆசைப்படக் கூடாது என்று பவார் கூறினார்.
குடியரசு தலைவர் பதவிக்கு தற்போதைய துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. குடியரசு தலைவர் பதவி வேட்பாளர் குறித்து அடுத்த மாதம் முடிவு தெரிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திடீரென நவீன் பட்நாயக்கும், ஜெயாவும் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பி.ஏ.சங்மாவுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக