வெள்ளி, மே 18, 2012

பெண்களுக்கு எதிரான வன்முறை: மமதாவிற்கு எதிராக தேசிய மகளிர் ஆணையம்!

புதுடெல்லி:மேற்கு வங்காள மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம்(என்.சி.டபிள்யூ) தெரிவித்துள்ளது.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் மமதா சர்மா, பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு நேற்று(வியாழக்கிழமை) அளித்த பேட்டியில் கூறியது:

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய அரசின் கீழ் இந்த வன்முறை அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த இரு மாதங்களில் இது மேலும் கூடியுள்ளது. பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றங்களை நிரூபிக்க முயலும் அதிகாரிகள் விசாரணை பூர்த்தியாகும் முன்னரே இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளில், யார் பக்கமும் சாராமல் பொதுப்படையான விசாரணைகள் நடத்த மாநில அரசு உறுதியளித்திருக்கிறது. ஆயினும், அது போன்ற நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
வழக்கு விசாரணை துரிதமாகவும் குறிப்பிட்ட காலவரையறை வகுத்தும் நடைபெற வேண்டும். விசாரிப்பு தடைபடக் கூடாது. விசாரணை செய்யும் அதிகாரி பாதி விசாரணையில் இடமாற்றம் செய்யப்படக் கூடாது. குற்றம் செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
தேசிய அளவில் உள்ள பாலியல் பலாத்கார அளவைவிட மேற்கு வங்கத்தில் இரு மடங்கு உள்ளது. ஆயினும் மமதா பானர்ஜியின் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று நான் கூறவில்லை என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக