ஞாயிறு, மே 20, 2012

பி.ஏ. சங்மாவை ஆதரியுங்கள்: அத்வானி, பரதனுக்கு ஜெயலலிதா கோரிக்கை

       சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள   மக்களவை முன்னாள் தலைவர் பிஏ.சங்மாவை ஆதரிக்குமாறு பாஜக தலைவர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பரதன், தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டார்.

இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களவையின் முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மா தமிழக முதல்வர் ஜெயலலிதாவை 15.5.2012 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ள தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை குடியரசுத் தலைவர் பதவியை வகித்ததில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவரை ஆதரிப்பதாக ஜெயலலலிதா 17.5.2012 அன்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இவரை ஆதரிக்குமாறு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் 18.5.2012 அன்று வேண்டுகோள் விடுத்தார்.

தொலைபேசியில் லாபி

சங்மா அவர்களுக்கு ஆதரவு திரட்டும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக இன்று (20.5.2012) பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஏ.பி. பரதன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், சிரோன்மணி அகாலிதள் கட்சியின் தலைவரும், பஞ்சாப் மாநில முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, மக்களவை முன்னாள் தலைவரும், வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்தவரும், பழங்குடியினத்தைச் சார்ந்தவருமான பி.ஏ. சங்மாவை நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்குமாறு ஜெயலலிதா கேட்டுக் கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக