புதுடெல்லி:அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிஜு ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் ஏற்படுத்திய குடியரசு தலைவர் கனவால் அல்லாடும் பி.ஏ.சங்மாவுக்கு அவர் சார்ந்திருக்கும் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவாரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது குடியரசுத் தலைவராக உள்ள பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 25-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பணி சூடுபிடித்துள்ளது. இந்தப் பதவிக்கு தற்போது குடியரசு துணைத் தலைவராக இருக்கும் ஹாமித் அன்சாரி பெயரும், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பெயரும் முதலில் அடிபட்டது. காங்கிரஸ் கட்சி இது விஷயத்தில் இன்னும் திட்டவட்டமான முடிவை எடுக்கவில்லை.
இந்நிலையில் மக்களவை முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா, சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தமது விருப்பத்தை அப்போது அவரிடம் வெளியிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பழங்குடியினர் சமுதாயம் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கு பி.ஏ.சங்மா வேட்பாளராகப் போட்டியிட்டால் அவரை அதிமுக ஆதரிக்கும் என்று ஜெயலிலதா தெரிவித்தார். அதே நேரத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், குடியரசுத் தலைவர் பதவிக்கு பி.ஏ.சங்மா பொருத்தமானவர்தான், அவரை ஆதரிக்க பிஜு ஜனதாதளம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார். குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராகப் போட்டியிடும் பி.ஏ.சங்மாவை இதர அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனிடையே பி.ஏ. சங்மாவை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்துவதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சங்மாவை ஆதரித்து இரு முதல்வர்களின் அறிக்கை வெளியானதுமே, பவார் தனது எதிர்ப்பை மறைமுகமாகத் தெரிவித்திருந்தார். மிகக் குறைந்த பலம் உள்ள தங்களது கட்சிக்கு அந்தப் பெரும் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது என்று பவார் கூறியிருந்தார்.
இந்நிலையில், சரத் பவாரை வெள்ளிக்கிழமை காலை சந்திக்கச் சென்றார் சங்மா. அப்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை அடுத்த குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
ஆனால் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முடிவே தனது கட்சியின் முடிவாக இருக்கும் என்று சரத் பவார் கூறிவிட்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து சங்மா கூறியது: அடுத்த குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவராக இருக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து இதனை வலியுறுத்தி வருகிறோம் என்று அவரிடம் விளக்கினேன்.
இந்தப் பதவிக்குப் பழங்குடியினத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பலரும் உள்ளனர். தற்போது மக்களவையின் துணைத் தலைவராக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கரிய முண்டா, மத்திய அமைச்சர் கிருஷ்ணசந்திர தேவ், நாகாலாந்தின் முன்னாள் முதல்வர் எஸ்.சி.ஜமீர், முன்னாள் மத்திய அமைச்சர் அரவிந்த் நேதம் ஆகியோரும் தகுதி வாய்ந்தவர்கள்தான் என்பதை எடுத்துக் கூறினேன்.
நான் கூறியதை முழுவதும் கேட்ட பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முடிவை ஒட்டியே தங்கள் கட்சி முடிவெடுக்கும் என்று பவார் கூறிவிட்டார். எனினும், இந்த விஷயத்தில் நான் அளித்த அனைத்து விவரங்களையும் கட்சியினருடன் விரிவாக விவாதிப்பதாக பவார் உறுதியளித்துள்ளார் என்று சங்மா கூறினார்.
உங்கள் பெயரை குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்துவது குறித்து பவார் கடிந்து கொண்டாரா என்று செய்தியாளர்கள் சங்மாவிடம் கேட்டனர். அப்படியொன்றும் இல்லை என்று சங்மா பதில் கூறினார்.
சங்மாவுக்கு பவார் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், பழங்குடியினத்தவர் குடியரசுத் தலைவராவதற்கு அக்கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவர் தாக்குர் ரண்தீர் சிங் ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஜம்முவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
அடுத்த குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடியினராக இருப்பதை தேசியவாத காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. அந்தப் பிரிவைச் சேர்ந்தவர் உயர் பதவியை அடையும் காலம் நெருங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு முதலில் ஆதரவு தெரிவித்த ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் பாராட்டுக்கு உரியவர்கள் என்று அவர் கூறியிருக்கிறார். இவருடைய இந்தக் கருத்தால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக