வியாழன், செப்டம்பர் 17, 2015

கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க.வுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது; இளங்கோவன் கண்டனம்

நவஇந்தியாவின் சிற்பிகளாக கருதப்பட்ட அன்னை இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோருடைய அஞ்சல் தலைகளை நிறுத்தி வைத்திருக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையங்களின் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார் 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், நவஇந்தியாவை உருவாக்கிய தலைவர்களின் பெருமையையும், சிதைத்து சிறுமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசப்பிதா மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க.வுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவஇந்தியாவின் சிற்பிகள் என்கிற பட்டியலில் 12 தலைவர்களை சேர்த்து அவர்களுடைய அஞ்சல் தலைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டன. இந்த பட்டியலில் முன்னாள் பாரத பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சமூக சேவகர்கள் ஆகியோர் அடங்கியிருந்தனர். ஆனால் இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைவர்களின் அஞ்சல் தலைகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பித்திருக்கிறது. ஆணை பிறப்பித்ததோடு நில்லாமல், புதிதாக 16 தலைவர்கள் பெயர்களை பட்டியலிட்டு அவர்களுடைய அஞ்சல் தலை வெளியிடப்படும் என்று அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை ஒட்டுமொத்த இந்தியர்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். கட்சி எல்லைகளை கடந்து இந்த நாட்டை நிர்மாணித்தவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுவதை எவரும் அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திப் பிடிப்பதற்கும் தம் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அன்னை இந்திராவும், தலைவர் ராஜீவ்காந்தியும் ஆவார்கள். தீவிரவாத பிரிவினை சக்திகளை முறியடிக்கிற வகையில் நடவடிக்கைகள் எடுத்ததற்காக அன்னை இந்திராவும், ராஜீவ்காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களது தியாகத்தை போற்றுவதற்கு பா.ஜ.க. தயாராக இல்லாவிட்டாலும், இழிவுபடுத்துவதற்கு எந்த உரிமையும் இருக்க முடியாது. அதை தேசபக்தி உள்ள மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

எனவே, நவஇந்தியாவின் சிற்பிகளாக கருதப்பட்ட அன்னை இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோருடைய அஞ்சல் தலைகளை நிறுத்தி வைத்திருக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையங்களின் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 18.9.2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் பொதுமக்களும், காங்கிரஸ் கட்சியினரும் பெருமளவில் பங்கேற்று தேச துரோகச் செயல்களுக்கு துணைபோகிற பா.ஜ.க.வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிட அன்போடு வேண்டுகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக