வியாழன், செப்டம்பர் 17, 2015

நரபலி புகாரில் தோண்டி எடுக்கப்பட்ட எலும்பு கூடுகள் பற்றி விசாரிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைப்பு

மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டியில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் குவாரியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் என்பவர் சகாயம் குழுவினரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இ.மலம் பட்டி மணிமுத்தாறு ஓடை சுடுகாட்டு பகுதியில் தோண்டியபோது 4 பேரின் மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் கிடைத்தன.

இது குறித்து கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு கூடுகள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் நரபலி புகார் உண்மைதானா? பலி கொடுக்கப்பட்டவர்கள் யார்? என்பது குறித்து மேலூர் டி.எஸ்.பி.மங்களேசுவரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், நாகராஜ், முத்து, பிரகாஷ் ஆகியோர் தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 1999–ம் ஆண்டு முதல் மேலூர் மற்றும் அதனை சுற்றுப் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களில் உளவுப் பிரிவு போலீசாராக பணிபுரிந்து தற்போது பதவி உயர்வு பெற்றுள்ளவர்களை கொண்டு மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி டி.எஸ்.பி. சரவண பெருமாள், சப்–இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வன், ரவி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களும் எலும்புக்கூடு பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உத்தரவின்பேரில் மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்களது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக