சனி, செப்டம்பர் 26, 2015

மார்பிள் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: வசுந்தரா மீது ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் புகார்-பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமேஸ்வர்துதி, செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலே ஆகியோர் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மீது ரூ.45 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார்கள். அவர்கள் கூறியதாவது:–
சுரங்க ஒதுக்கீடுகள் வெளிப்படையான ஏல முறையில் நடைபெற வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை. ஆனால் ராஜஸ்தானில் 653 மார்பிள் சுரங்கங்கள் மத்திய அரசின் கொள்கைக்கு மாறாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதனால் மாநில அரசுக்கு ரூ.45 ஆயிரம்கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா வரை நீண்ட போதிலும் சுரங்கத்துறையின் முதன்மை செயலாளர் அசோக் சிங்வி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். முந்தைய பா.ஜனதா ஆட்சியிலும் சிங்விதான் சுரங்கத் துறை செயலாளராக இருந்தார்.

சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. எனவே இதற்கு பொறுப்பு ஏற்று முதல்–மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தை சட்ட சபையிலும், சாலைகளிலும் காங்கிரஸ் கட்சி எழுப்பும். சட்ட ரீதியான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்.இந்த முறைகேடு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நேரடி கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே லண்டனில் இருக்கும் லலித்மோடிக்கு வசுந்தரா உதவியதாகவும், இருவருக்கும் இடையே வர்த்தக உறவு இருப்பதாகவும் குற்றச்சாட்டு வெளியாகி பாராளுமன்றத்தின் மழை கால கூட்டத்தொடரில் புயலை கிளப்பியது.தற்போது சுரங்க ஒதுக்கீடு ஊழல் வசுந்தராவுக்கு எதிராக புதிதாக கிளம்பியுள்ளது. இதனால் வசுந்தராவுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக