சனி, செப்டம்பர் 26, 2015

மெக்கா புனித பயண நெரிசலில் சிக்கி பலியான 14 இந்தியர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டு மெக்கா சென்ற ஹஜ் யாத்திரீகர்கள் மெக்காவில் தொழுகை நடத்திவிட்டு மினா என்ற இடத்தில் சாத்தான்மீது கல் எறிதல் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

அப்போது அங்கு ஏற்பட்ட திடீர் நெரிசலில் யாத்திரீகர்கள் சிக்கினார்கள். இதில் 719 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 14 பேர் இந்தியர்களாகும்.

பலியான இந்தியர்களில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் மலப்புரத்தை சேர்ந்த அப்துல்ரகுமான் (வயது 51). இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த இவர் தனது மனைவி சுலேகா (43) உடன் மெக்கா சென்ற போது நெரிசலில் சிக்கிய மனைவியை காப்பாற்ற முயன்றபோது பலியாகிவிட்டார். சுலேகா அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அப்துல் ரகுமானின் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகனின் திருமணத்தை முடித்துவிட்டு சவுதி அரேபியா செல்ல அப்துல்ரகுமான் திட்டமிட்டிருந்தார். அதற்குள் அவர் பலியாகிவிட்டார்.

இதேபோல பாலக்காடு வடக்கு பகுதி புதுக்கோடு என்ற இடத்தை சேர்ந்த மொய்தீன் அப்துல்காதர் (62). என்பவரும் இந்த நெரிசலில் உயிரிழந்துள்ளார்.
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த மொய்தீன் அப்துல்காதர் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் இங்கிருந்து குழுவினருடன் ஹஜ் யாத்திரை சென்ற போது நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.

மேலும் கோழிக்கோடு அருகே குருச்சர் பகுதியை சேர்ந்த சஜி உஸ்மான் (43). அவரது மனைவி சிபு (36). உறவினர்கள் வினிஸ் (17), அபிஸ் (10) ஆகியோர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கு உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக