ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநில பா.ஜ.கவில் பதவி மோகம் தலைவிரித்து ஆடத் துவங்கியுள்ளது. அடுத்த முதல்வர் கனவில் மிதக்கும் எதிர்கட்சி தலைவரான வசுந்தராஜே சிந்தியா, தலைமையுடன் மோதலை துவக்கியதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.கவில் கலகம் வெடித்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக வசுந்தராஜே சிந்தியாவை அறிவிக்கவேண்டும் என்பது எம்.எல்.ஏக்களின் கோரிக்கையாகும். வசுந்தராஜே மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் 2 சுயேட்சைகள் உள்பட 56 எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை வசுந்தராஜேவிடம் அளித்துள்ளனர்.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 79 உறுப்பினர்கள் உள்ளனர். எம்எல்ஏக்கள் தவிர, மாநில நிர்வாகிகளும், யுவ மோர்ச்சா அமைப்பினரும் தங்களது ராஜிநாமா கடிதங்களை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கிஸான் மோர்ச்சா துணைத் தலைவர் சுபாஷ் மெஹரியாவும் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்வந்திருக்கிறார்.
இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து, வசுந்தராவின் இல்லம் முன்பு ஞாயிற்றுக்கிழமை காலை முதலே குவியத் தொடங்கிய பாஜகவினர், அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
ராஜஸ்தான் மாநில மூத்த பா.ஜ.க தலைவர் குலாப் சந்த் கட்டாரியா 28 தினங்களைக் கொண்ட லோக் ஜாகரண் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தது வசுந்தராஜேவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் நடந்த பா.ஜ.க மூத்த தலைவர்களின் கூட்டத்தில் வசுந்தராஜே, கட்டாரியின் யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சுயமாக தன்னை முதல்வர் வேட்பாளராக காட்டவே கட்டாரியா இந்த யாத்திரையை நடத்துவதாக பா.ஜ.கவில் ஒரு பகுதி எம்.எல்.ஏக்கள் நம்புகின்றனர்.
வசுந்தராஜே தலைமையிலான கடந்த அமைச்சரவையில் கட்டாரியா உள்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார். வசுந்தராஜேவின் எதிர்ப்பைத் தொடர்ந்து தனது யாத்திரையை ரத்துச் செய்வதாக கட்டாரியா அறிவித்துள்ளார்.
முதல்வர் வேட்பாளராக வசுந்தராஜே சிந்தியாவை பா.ஜ.க மேலிடம் அறிவிக்கவேண்டும் என்று யுவமோர்ச்சா மாநில தலைவர் ஸன்வர் ஜாட் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில், தனது யாத்திரையை சிலர் எதிர்ப்பது துரதிர்ஷ்ட வசமானது என்று கட்டாரியா தெரிவித்துள்ளார். “மத்தியிலும் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்திருக்கும் தோல்விகளை மக்களுக்கு எடுத்துக் காட்டுவது எனது நோக்கமேயன்றி, முதல்வர் வேட்பாளராக என்னை முன்னிறுத்திக் கொள்வதல்ல” என்று கட்டாரியா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக