திங்கள், மே 07, 2012

மோடியுடன் கைக்குலுக்கல்:நிதிஷின் மதசார்பின்மை வேடம் கலைந்துவிட்டது – லாலு கண்டனம்!

பாட்னா:தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையம் குறித்து விவாதிக்க டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில முதல்வர்கள் கூட்டத்தில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கைக்குலுக்கி வரவேற்றதன் மூலம் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரின் மதசார்பின்மை முகமூடி கிழிந்துவிட்டது என்று ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) லாலு செய்தியாளர்களிடம் கூறியது:
நரேந்திர மோடியுடன் கைகுலுக்கியதன் மூலம் நிதீஷ் குமாரின் மதசார்பின்மைத் தகுதிகள் மீண்டும் விமர்சனத்துக்கு வந்துவிட்டன. டெல்லியில் நடைபெற்ற தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் மோடிக்கு நிதீஷ் வாழ்த்துத் தெரிவித்தார். அதனை மொத்த ஊடகங்களும் நாடு முழுக்கப் பறைசாற்றின. பீகாரைப் பொருத்தவரை, மோடியிடமிருந்து விலகியிருப்பது போலவே நிதீஷ் தன்னைக் காட்டிக்கொண்டிருந்தார். ஆனால், வெளியிடங்களில் அவர் மோடியுடன் உறவு கொண்டாடுகிறார். இப்போது அவரது சாயம் வெளுத்துவிட்டது. அவர் சிறுபான்மையினரை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது தெரிந்துவிட்டது.
2010-ஆம் ஆண்டு  மோடியுடன் இணைந்து நிற்கும் நிதீஷ் குமாரின் போஸ்டருக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தது சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகளை கவரவே ஆகும்.  இவ்வாறு லாலு தெரிவித்தார்.
இதுக்குறித்து பதில் அளித்துள்ள பா.ஜ.கவின் துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், மோடியுடன் நிதீஷ் கைக்குலுக்கியது அடிப்படை நாகரீகம் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக