மாஸ்கோ:ரஷ்ய அதிபராக 3-வது முறையாக விளாடிமிர் புடின் பதவி ஏற்க 3 மணிநேரம் மீதமிருக்கும் சூழலில் மாஸ்கோவில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பேரணியில் புடினுக்கு எதிராக கோஷங்கள் முழங்கப்பட்டன.
புடின் ரஷ்ய அதிபர் அல்ல என்று எழுதப்பட்ட பேனர்களை பிடித்திருந்த எதிர்ப்பாளர்கள், தேர்தலில் புடின் மோசடி நடத்தி வெற்றிப் பெற்றதாக குற்றம் சாட்டினர்.
மாஸ்கோவை தவிர இதர ரஷ்ய நகரங்களிலும் புடினை எதிர்த்து பேரணிகள் நடந்தன. அதிபர் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் நடக்கும் அதிபர் மாளிகையில் நுழைய முயன்ற எதிர்ப்பாளர்களை போலீஸ் கைது செய்தது. இன்று புடின் அதிகாரப்பூர்வமாக அதிபராக பதவி ஏற்கிறார்.
இதனிடையே, புடின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேரணியை அறிவித்துள்ளனர். புடினின் யுனைட்டட் ரஷ்ய பார்டி தேர்தலில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து ரஷ்யாவில் துவங்கிய மக்கள் போராட்டம், மார்ச் மாதம் அதிபர் தேர்தலில் புடின் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வலுப்பெற்றது.
இரண்டு தேர்தல்களிலும் பெரும் மோசடிகள் நடந்ததாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக