புதன், டிசம்பர் 12, 2012

இந்தியாவில் எந்த முறைகேட்டிலும் நாங்கள் ஈடுபடவில்லை- வால்மார்ட் !

வால்மார்ட் நிறுவனம் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்க மிகப் பெரிய லாபியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனமே கூறியுள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ள பின்னணியில், இந்தியாவில் நுழைவதற்காக இந்தியாவில் எந்த மோசடியான செயலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. தங்களது நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்காக 2008ம் ஆண்டு முதல் இதுவரை ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக வால்மார்ட் நிறுவனம்
சமீபத்தில் கூறியது. இது இந்தியாவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், அமெரிக்காவில் லாபி செய்வதற்காக தாங்கள் பல கோடி பணத்தை செலவு செய்தது உண்மைதான். அதேசமயம், அந்தப் பணத்தை வைத்து இந்தியாவில் எந்த முறைகேட்டிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று விளக்கியுள்ளது வால்மார்ட்.
இதுகுறித்து வால்மார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரிடமும் நாங்கள் எந்த முறைகேட்டிலும் நாங்கள் ஈடுபடவில்லை. எங்களது செலவுகள் அனைத்தும் அமெரிக்க அளவில் மட்டுமே இருந்தது. இந்தியாவில் நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.
அமெரிக்கச் சட்டப்படி, தாங்கள் லாபி செய்யும் விஷயம் தொடர்பான செலவீனங்கள், முயற்சிகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அந்த அடிப்படையின் படிதான் நாங்கள் வால்மார்ட் இந்தியா முயற்சிக்காக செய்த செலவுகளைத் தெரிவிக்க நேரிட்டது. மற்றபடி இதற்கும், இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எங்களுக்கு ஆலோசனை கொடுத்தவர்களுக்கான கட்டணம், நாங்கள் அமெரிக்க அரசு மட்டத்தில் எடுத்த முயற்சிகளுக்கான செலவுகள் உள்ளிட்டவற்றைத்தான் நாங்கள் தெரிவித்திருந்தோம். மற்றபடி இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவில் நாங்கள் எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடவில்லை. நாங்கள் செய்த அனைத்து முயற்சிகளும், லாபியும் அமெரிக்காவில் மட்டுமே இடம் பெர்றது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக