திங்கள், மே 07, 2012

கூடங்குளத்தில் 500 பெண்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

இடிந்தகரை:காவல்துறையின் தடையை மீறி இடிந்தகரையில் 45 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 9000 க்கும் அதிகமான மக்கள் இடிந்தகரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 500  பெண்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சுற்றி உள்ள ஊர்களில் இருந்து பெருமளவு மக்கள் கூடங்குள அணுஉலை எதிர்ப்பு குழுவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அணுஉலை எதிர்ப்பு குழுவின் தலைவர்களில் ஒருவரான விக்டோரியா புஷ்பராயன் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது தொடர்ந்து நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் மேலும் காவல்துறையின் தடுப்பு நடவடிக்கையால் இன்று காலை 400  பெண்கள் மட்டுமே முதலில் போராட்டக் களத்திற்கு வந்ததாகவும் மீதமுள்ள பெண்கள் மாலை வந்தடைந்ததாகவும் புஷ்பராயன் தெரிவித்தார்.
மேலும் கடந்த 1_ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் 25 ஆண்களில் ஒருவரைத் தவிர அனைவரும் தங்களின் போராட்டத்தை தொடர்வதாகவும் விக்டோரியா புஷ்பராயன் தெரிவித்தார்.
உண்ணாவிரதம் இருந்த வினோத் குமார் போராட்டக் களத்தில் நிலை குலைந்ததை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் விக்டோரியா புஷ்பராயன் தெரிவித்தார்.
போராட்டக் களத்திற்கு மக்கள் வருவதை காவல்துறையினர் தடுப்பதுடன் அவர்களை மிரட்டுவதாகவும் விக்டோரியா புஷ்பராயன் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை இடிந்தகரையில் வாடகை வண்டிகள் வைத்திருப்பவர்களை போராட்டக் களத்திற்கு மக்களை அழைத்து வரக்கூடாது என்று கூறுவதாகவும் மீறினால் உரிமம் பிரிக்கப்படும் என்று மிரட்டுவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக