திங்கள், ஏப்ரல் 07, 2014

பாராளுமன்றத்துக்கு இன்று முதல்கட்ட தேர்தல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று வர்ணிக்கப்படும் இந்தியாவில், பாராளுமன்றத்துக்கு 9 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இன்று முதல் கட்ட தேர்தல்
இந்த தேர்தல் இன்று (7-ந் தேதி) தொடங்கி, அடுத்த மாதம் 12-ந் தேதி முடிகிறது. முதல் கட்டமாக, அசாமில் 5 தொகுதிகளிலும், திரிபுராவில் ஒரு தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்கிறது.
அசாமில் தேஜ்பூர், காலியாபார், ஜோரத், திப்ருகார், லக்கிம்பூர் ஆகிய 5 தொகுதிகளும், திரிபுராவில் திரிபுரா மேற்கு தொகுதியும் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் ஆகும்.
அசாமில் 51 வேட்பாளர்கள்
அசாமில் 5 தொகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சிகளான ஆளும் காங்கிரஸ், பாரதீய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், அசாம் கணபரிஷத், ஆம் ஆத்மி, அகில இந்திய பார்வர்டு பிளாக், சமாஜ்வாடி கட்சிகள் போட்டியிடுகின்றன.
5 தொகுதிகளிலும் மொத்தம் 51 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் மத்திய மந்திரிகள் ரானீ நரா, பாபன் சிங் கட்டோவார், முன்னாள் மத்திய மந்திரி பிஜோய் கிருஷ்ண ஹண்டிக், முதல்-மந்திரி தருண் கோகாயின் மகன் கவுரவ் கோகாய் ஆகியோர் முக்கியமானவர்கள்.
தீவிர பிரசாரம்
அசாமில் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரசுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மொத்தம் உள்ள 64 லட்சத்து 41 ஆயிரத்து 634 வாக்காளர்களுக்காக 8 ஆயிரத்து 588 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
திரிபுரா
திரிபுராவில் இன்று தேர்தல் நடக்கவுள்ள மேற்கு திரிபுரா தொகுதியில் ஒரு பெண் உள்பட 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அகர்தலாவில் பெண் வாக்காளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் 3 வாக்குச்சாவடிகளில் அனைத்து தேர்தல் பணியாளர்களும் பெண்களாக இருப்பார்கள். 20 ஆயிரம் தேர்தல் பணியாளர்களும், அதே எண்ணிக்கையில் போலீசாரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
12 லட்சத்து 46 ஆயிரத்து 794 வாக்காளர்களுக்காக 1,605 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானதாகவும், 474 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தொகுதியில் கடந்த 11 தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்த முறையும் அங்கு அந்த கட்சியின் வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தாதான் வெற்றி பெறும் நிலையில் உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பேராசிரியர் அருணோதய சஹா, பாரதீய ஜனதா வேட்பாளராக அதன் மாநில தலைவர் சுதீந்திர சந்திரதாஸ் குப்தா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அந்த கட்சியின் மாநில தலைவர் ரத்தன் சக்கரவர்த்தி உள்ளிட்டவர்களும் களத்தில் உள்ளனர்.
திரிபுராவில் மீதம் உள்ள இன்னொரு தொகுதிக்கு 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
பலத்த பாதுகாப்பு
இரு மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு முடிகிறது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றம் மிகுந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்படுகின்றன.
2-வது கட்ட தேர்தல்
5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் 9-ந் தேதி (புதன்கிழமை) இரண்டாவது கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகள் அருணாச்சலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து என 5 மாநிலங்களில் பரவி உள்ளன.
9 கட்ட தேர்தல்களும் முடிந்த பின்னர் ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக