ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

தினேஷ் கார்த்திக்கும், டுமினியும் அதிரடி : வெற்றிப்பாதைக்கு திரும்பியது டெல்லி

துபாயில் நேற்று ஐ.பி.எல். லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதல் ஓவரின் முதல் பந்திலேயே கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர் காலிஸ் ஆட்டமிழந்நதார். அடுத்த ஓவரில் கேப்டன் காம்பிரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த பாண்டேவும் உத்தப்பாவும் அதிரடியில் ஈடுபட்டனர். இதனால் அணியின் ரன் வேகம் அதிகரித்தது. 48 ரன்கள் குவித்த நிலையில் பாண்டே ஆட்டமிழந்நதார். அவரை தொடர்ந்து உத்தப்பாவும் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் ஷகிப் அல்ஹசன் 30 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நைல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் 26 ரன்னிலும் டெய்லர் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், டுமினியும் அதிரடியில் இறங்கினர். கார்த்திக் 56 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த திவாரி 8 ரன்னிலும் நீசம் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் டுமினி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டுமினி 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் குவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக