புதன், ஏப்ரல் 30, 2014

7-வது கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 9 கட்டமாக அறிவிக்கப்பட்டதில், 6 கட்ட தேர்தல்கள் 349 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டன. 7-வது கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது இந்த தேர்தலில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 
ஆந்திர மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாநிலமான தெலுங்கானாவில் பாராளுமன்ற தேர்தலுடன், முதல் சட்டமன்ற தேர்தலும் நடப்பது குறிப்பிடத்தக்கது. 7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இந்த தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்கள், தொகுதிகள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- 

குஜராத் - 26, பஞ்சாப் - 13, ஆந்திரா - 17, உத்தரபிரதேசம் - 14, மேற்கு வங்காளம் - 9, பீகார் - 7, காஷ்மீர் - 1, யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ தலா ஒரு தொகுதிகள். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள். மோடி குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், சோனியா காந்தி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்கள். 

பாரதீய ஜனதா தலைவர்கள் எல்.கே.அத்வானி (காந்திநகர்), ராஜ்நாத்சிங் (லக்னோ), அருண்ஜெட்லி (அமிர்தசரஸ்), முரளிமனோகர் ஜோஷி (கான்பூர்), உமா பாரதி (ஜான்சி) மற்றும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா (ஸ்ரீநகர்) ஆகியோரின் வெற்றி-தோல்வி இன்று முடிவு செய்யப்படுகிறது. 

இன்றைய தேர்தலில் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த 89 தொகுதிகளில் 1,295 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 13 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக