வியாழன், ஏப்ரல் 24, 2014

ஆசிய பேட்மிண்டன் போட்டி: தொடக்க ஆட்டத்தில் சிந்து, காஷ்யப் வெற்றி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி தென் கொரியாவில் உள்ள ஜிம்சியோனில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தொடக்க சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி.சிந்து, ஹாங்காங் வீராங்கனை ஷெங் நானை சந்தித்தார். 
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-15, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் ஷெங் நானை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 2-வது சுற்று ஆட்டத்தில் சிந்து, ஜப்பான் வீராங்கனை இரிகோ ரோஸ்சை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் சிந்துக்கு கடும் சவாலாக இருக்கும். ஏனெனில் ரோசுக்கு எதிரான முந்தைய மூன்று மோதல்களிலும் சிந்து தோல்வியை சந்தித்து இருக்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21-14, 21-17 என்ற நேர்செட்டில் மலேசிய வீரர் கோக் சூன் ஹாத்தை தோற்கடித்தார். இந்த வெற்றியை பெற காஷ்யப்புக்கு 35 நிமிடமே தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் குருசாய்தத் 22-20, 23-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் பெட்பிரதாப் கோசித்தை சாய்த்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 7-21, 14-21 என்ற நேர்செட்டில் இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லின் டானிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-ஜூவாலா கட்டா ஜோடி 21-18, 21-15 என்ற நேர்செட்டில் சிங்கப்பூரின் மிங்டியன்- நியோ யான் வனீசா ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி தோல்வி அடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக