வியாழன், ஏப்ரல் 17, 2014

மோடி பிரசாரம்: ராமதாஸ் புறக்கணிப்பு- வைகோ சமரச முயற்சி

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். கிருஷ்ணகிரியில் பா.ம.க. வேட்பாளர்களும், சேலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர்களும் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
சேலத்தில் நடந்த கூட்டத்தில் தேமு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் 14 தே.மு.தி.க. வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில் நடந்த மோடி கூட்டத்தில் பா.ம.க. வேட்பாளர்களுடன் அன்பு மணி கலந்து கொண்டார். ஆனால் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்க வில்லை. தர்மபுரி தொகுதியில் கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வந்த ராமதாஸ் நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த மோடி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் திருவண்ணாமலை தொகுதிக்கு பிரசாரம் செய்ய சென்று விட்டார்.
டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் வரை கிருஷ்ணகிரியில்தான் தங்கியிருந்தார். எனவே மோடி கூட்டத்தில் அவர் பங்கேற்பார் என்று தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் திடீர் என்று திருவண்ணாமலை தொகுதிக்கு சென்று விட்டார். இதனால் பா.ம.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே பா.ம.க. நிறுத்தி இருந்த வேட்பாளர்களை வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டதால்தான் ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக பா.ம.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கிருஷ்ணகிரியில் தங்கியிருந்த டாக்டர் ராமதாசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் 2 நாள் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு விரைவில் முடிவை தெரிவிக்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார். அன்புமணியை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார். எனவே 2 தொகுதிகளிலும் டாக்டர் ராமதாஸ் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக