செவ்வாய், ஏப்ரல் 29, 2014

இஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீஃ உள்பட 683 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பு!

இஃவானுல் முஸ்லிமீனின் உயர் தலைவர் முஹம்மது பதீஃ உள்பட 683 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.தெற்கு மாகாணமான மினியாவில் கடந்த ஆண்டு சர்வாதிகார ராணுவ அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் நிலையத்தை தாக்கி ஒரு போலீஸ் காரரை கொலைச் செய்து, இழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இத்தனை பேருக்கும் நீதிமன்றம் மரணத்தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது.
அதேவேளையில் இதே நீதிமன்றம் கடந்த மாதம் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 529 பேரில் 37 பேரைத் தவிர மீதமுள்ள 492 பேருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
எகிப்தின் வரலாற்றில் அதிக நபர்களுக்கு முதன் முதலாக மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் 24-ஆம் தேதி 529 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி ஸஈத் யூசுஃப் என்பவர்தாம் இதே வழக்கிலும் மரணத்தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளார்.எகிப்தின் வரலாற்றில் முதன்முறையாக ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மது முர்ஸியின் தலைமையிலான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி(எஃப்.ஜே.பி) அரசை ராணுவம் சதிப்புரட்சியின் மூலமாக கவிழ்த்தது. இதனை கண்டித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கொடுங்கோன்மையை ஏவி நூற்றுக்கணக்கான மக்களை ராணுவ அரசு படுகொலைச் செய்தது.அத்தோடு பல ஆயிரம் இஃவான்களையும், ஆதரவாளர்களையும் கைதுச் செய்து சிறையில் அடைத்தது.அவர்கள் மீது அநியாயமாக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன.அதில் ஒன்றில் தான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் கலவரத்தை தூண்டியதாக இஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீஃ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீதிக்கு ஒவ்வாத அதிவேக விசாரணை நடவடிக்கைகளை மனித உரிமை அமைப்புகளும், ஐ.நாவும் கண்டித்திருந்தன.ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நீதிமன்றம் இந்த அநியாய தீர்ப்பை வழங்கியுள்ளது.சில நிமிடங்களுக்குள்ளாகவே ஒவ்வொருவருடைய விசாரணை நடவடிக்கைகளை முடித்துக்கொண்டது நீதிமன்றம்.குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதவாக வாதாட வழக்கறிஞர்களுக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டுகிறது.
அடிப்படை உரிமைகளை கூட மீறி விசாரணையை முடித்துக்கொண்டதாகவும், இத்தீர்ப்பு எகிப்தில் சட்ட கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் ஆம்னஸ்டி இண்டர்நேசனல் பிரதிநிதி முஹம்மது அல் மிஸைரி தெரிவித்தார்.ராணுவ அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை மிரட்டுவதற்காகவே இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் மேற்காசியா-வடக்கு ஆப்பிரிக்கா இயக்குநர் ஸாரா லீ வில்ஸன் தெரிவித்தார்.
நீதிபதியின் நம்பிக்கையைக் குறித்து கேள்வி எழுப்பி எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் பலரும் விசாரணையை புறக்கணித்திருந்தனர்.நீதிபதியை,’கசாப்புக்காரன்’ என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார். தீர்ப்பு வெளியானதும் நீதிமன்றத்திற்கு வெளியே தங்களது நேசத்திற்குரியவர்களை காத்து நின்ற பெண்களும், குழந்தைகளும் அடங்கிய குடும்பத்தினரின் அழுகை குரல் கூட்டாக எழுந்தது.சிலர் மயங்கி விழுந்தனர்.இத்தீர்ப்புக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அப்பீல் நீதிமன்றத்தை அணுக உள்ளனர்.
இதனிடையே எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற இயக்கமான ஏப்ரல் 6 என்ற இளைஞர் இயக்கத்தை கெய்ரோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தேசத்துரோக குற்றம் மற்றும் எகிப்தை சர்வதேச அளவில் அவமதிக்க முயற்சித்தது ஆகிய வழக்குகள் இவ்வமைப்பின் சுமத்தப்பட்டது.இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தை ஏப்ரல் 6 இயக்கம் அங்கீகரிக்கவில்லை என்றாலும் முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்த ராணுவ சர்வாதிகார அரசின் நடவடிக்கையை இவ்வியக்கம் கடுமையாக விமர்சித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக