புதன், ஏப்ரல் 23, 2014

தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: தமிழகம், புதுச்சேரியில் நாளை ஓட்டுப்பதிவு

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் கடந்த 7-ந்தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளது. 6-வது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது. 40 பாராளுமன்ற தொகுதிகளுடன் சேர்த்து ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

பாரதீய ஜனதா கட்சியும் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்பட பல சிறிய கட்சிகளையும் சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் தனித்தும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்தும், சில தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலை சந்திக்கிறது. எனவே இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 6 முனை போட்டி நடக்கிறது.

மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டன. அ.தி.மு.க. பொதுச்செயலாளரான முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். கடைசி 3 நாட்கள் சென்னையில் பல இடங்களில் அவர் வாக்குசேகரித்தார். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கூட்டணி கட்சித் தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர் கருணாநிதி முக்கிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒரு நாளும், ராகுல்காந்தி ஒரு நாளும் தலா ஒரு கூட்டத்தில் பேசினார்கள்.

ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். 6 மணிக்கு பின்னரும் வாக்குச்சாவடியில் வரிசையில் வாக்காளர்கள் இருந்தால் அவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்தலை அமைதியாக நடத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி முத்திரையிடப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. அந்த எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளை பூட்டி, முத்திரையிட்டு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மே 16-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக