அதிகாரத்தை குறி வைத்து தலித்துகளை பா.ஜ.க, இந்துக்களாக சித்தரிப்பதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.கவின் இந்த சதி வலையில் தலித்துகள் சிக்கிவிடக் கூடாது என்று லக்னோவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாயாவதி எச்சரிக்கை விடுத்தார்.
லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நகுல் துபையை ஆதரித்து பேசிய மாயாவதி கூறியது:
தேர்தல் காலங்களில் மட்டுமே தலித் கிராமங்கள் மற்றும் சேரிகளுக்கு பா.ஜ.கவும், சங்க் பரிவாரமும் வருகை தருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு தீண்டாமை திரும்ப வந்துவிடும். பா.ஜ.கவின் அடித்தளமான மேல் சாதியினர் தலித்துகள் மீது தீண்டாமையை திணிக்காவிட்டால் தலித்துகள் முன்னேறியிருப்பார்கள்.
இந்துக்களின் ஒற்றுமை என்று கூறும் பா.ஜ.க, தீண்டாமை மற்றும் சாதியின் பகிரங்கமான உருவமாகும். இந்து மதத்தில் கண்ணியமாக வாழ முடியாது என்று உறுதியாக தெரிந்ததால் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புத்த மதத்தில் இணைந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே தலித்துகள் வாக்களிக்க வேண்டிய ஒரே கட்சியாகும். முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்தால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்பது பா.ஜ.கவுக்கு தெரியும். ஆகையால்தான் அம்பேத்கரை முஸ்லிம் விரோதியாக பா.ஜ.க பரப்புரை செய்கிறது. முஸ்லிம்களையும், தலித்துகளையும் பிரிப்பதே பா.ஜ.கவின் நோக்கம். அம்பேத்கர் முஸ்லிம் விரோதியாக இருந்திருந்தால் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை உருவாக்கியிருக்க முடியாது. இச்சூழலில் முஸ்லிம்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக