கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. அங்கு காணாமல் போனவர்களின் உடல்களை தேடும் பணியில் நீச்சல் வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
கப்பல் விபத்து
தென்கொரியா தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜு தீவுக்கு 475 பேருடன் புறப்பட்ட கப்பல் ஒன்று, கடந்த 16–ந்தேதி நடுக்கடலில் திடீரென மூழ்கியது. இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில், தென்கொரியாவின் அன்சனை சேர்ந்த தனியார் உயர்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் என 339 பேரும் அடங்குவர்.இந்த கப்பலில் பயணம் செய்த சுமார் 170 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்களை தேடும் பணி கடந்த 6 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் காணாமல் போனவர்கள் யாரும் இனியும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால், அவர்களின் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
மூழ்கிய கப்பலில் இருந்து நேற்று வரை 52 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 23 மாணவ–மாணவிகளின் உடல்களும் அடங்கும். இன்னும் சுமார் 250 பேரை காணவில்லை என்பதால், அவர்களின் உடல்களையும் மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதற்காக ஆழ்கடலில் மூழ்கி தேடும் நீச்சல் வீரர்கள் சம்பவ இடத்தில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மோசமான வானிலை மற்றும் கடும் இருள் நிலவி வந்ததால், உடல்களை தேடும் பணியில் மந்தநிலை நீடித்தது.
கப்பலின் ஜன்னல் உடைப்பு
ஆனால் மூழ்கிய கப்பலின் பிரதான ஜன்னல் ஒன்றை நீச்சல் வீரர்கள் நேற்று முன்தினம் உடைத்து உள்ளே நுழைந்தனர். இதைப்போல கப்பலின் உள்ளே நுழையும் வகையில், மேலும் சில வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மூலம் நேற்று சுமார் 13 உடல்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மீட்புப்பணியின் போது படுகாயமடைந்த தென்கொரிய கடற்படை மாலுமி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
உறவினர்கள் போராட்டம்
இதற்கிடையே கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், சம்பவ இடத்தில் மீட்புப்பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அதிபர் மாளிகைக்கு சென்று புகார் அளிப்பதற்காக பேரணியாக செல்ல முயன்ற சுமார் 100 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
எனினும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்கியிருக்கும் அரங்குக்கு வந்த பிரதமர் சுங் காங் வொன், அவர்களுடைய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக