8 அணிகள் இடையிலான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் துபாயில் இன்றிரவு நடக்கும் 20-வது லீக் ஆட்டத்தில் ரோகித் ஷர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகின்றன. இது தான் அரபு நாட்டில் நடைபெறும் கடைசி ஐ.பி.எல். போட்டியாகும்.
இதன் பிறகு எஞ்சிய ஆட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சவாலை தொடங்கிய மும்பை அணி இந்த அளவுக்கு மோசமாக விளையாடும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கொல்கத்தா, பெங்களூர், சென்னை, டெல்லி அணிகளிடம் வரிசையாக 4 ஆட்டங்களில் உதை வாங்கியுள்ள மும்பை அணி வெற்றியின்றி புள்ளி பட்டியலில் கடைசி இடம் வகிக்கிறது.
கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும் மும்பை அணி பேட்டிங்கில் தான் சொதப்புகிறது. இதுவரை நடந்த ஆட்டங்களில் 122, 115, 141, 125 ரன்கள் வீதமே எடுத்திருக்கிறது. ரோகித் ஷர்மா தவிர வேறு யாரும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் மைக் ஹஸ்சியை பின்வரிசையில் இறக்கி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை.
அந்த அணிக்கு நீண்ட காலமாக தொடக்க வீரர்கள் பிரச்சினையாக இருக்கிறது. அது இந்த முறையும் விதிவிலக்கல்ல. மலிங்கா, ஜாகீர்கான், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன்சிங் போன்ற பந்து வீச்சாளர்கள் கைகொடுக்கிற நிலையில், பேட்ஸ்மேன்களும் ஒருங்கிணைந்து விளையாடினால் முதற்கட்ட சுற்றில் முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.
ஐதராபாத் அணியின் நிலைமையும் ஏறக்குறைய இது போன்று தான். 4 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி (டெல்லிக்கு எதிராக), 3 தோல்விகளை சந்தித்து இருக்கிறது. கேப்டன் ஷிகர் தவான், ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் மூவரும் ஜொலித்த ஆட்டத்தில் தான் அந்த ஒரு வெற்றியும் கிட்டியது.
இவர்கள் நிலைத்து நிற்பதை பொறுத்தே ஐதராபாத்தின் ஸ்கோர் அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது. பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஸ்டெயின் தொடர்ந்து அசத்தி வரும் நிலையில், பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத் அணியால் சரிவில் இருந்து மீள முடியும்.
மும்பையும், ஐதராபாத்தும் இதுவரை 2 ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வெற்றி கண்டுள்ளன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்களில் நேரடியாக காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக