வடசென்னை தொகுதி எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் நிஜாம் முகைதீனை ஆதரித்து, பெரம்பூர் முத்தமிழ் நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனி முகமது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரஷீத், பொது செயலாளர் கறீம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஷேக், பெரம் பூர் தொகுதி தலைவர் ஹாரீஸ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர் நிஜாம் முகைதீன் பேசியதாவது: குடிநீரை கூட காசு கொடுத்து வாங்கும் அவலநிலை இன்றைக்கு உள்ளது. மக்களுக்கு இலவசமாக கிடைக்கக்கூடிய தண்ணீரை, பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ஆட்சியாளர்கள் தாரை வார்த்து கொடுப்பதே இதற்கு காரணம்.
மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீரை, சுகாதாரமான முறையில் கொடுக்க முடியாத அரசுகள், வளர்ச்சி என்ற வார்த்தையை கூட சொல்ல தகுதியற்றவை. தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்பே எஸ்.டி.பி.ஐ கட்சி மக்களின் அடிப்டை பிரச்னைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குடிநீர் கிடைக்காத பகுதிகளில், மக்களுக்கு இலவச குடிநீர் விநியோகம் செய்துள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகாத நிலையில் அளிக்கப்படும் வாக்குறுதிககள் அனைத்தும் போலியானவை.
எனவே, நாங்கள் போலி வளர்ச்சி திட்டங்களை அறிவிக்காமல் அடிப்படை வசதிகளை முதலில் மேம்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் ரத்தினம், மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது இப்ராஹிம், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில துணை தலைவர் ஷேக் அன்சாரி, பாஸ்டர் ரேவ் ஹாரீஸ் ஆகியோர் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக