கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்ற 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் பரவி வரும் மர்ம நோயானது, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் 'மெர்ஸ்' மர்ம நோய் தொடர்பாக நடத்திய ஆராய்ச்சியில் ஓமன் நாட்டில் உள்ள சிலவகை ஒட்டகங்களின் மூலம் இந்நோய் பரவியிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் இந்த நோய் முதலில் காணப்பட்டதால் இதற்கு மெர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சாதாரண சளியுடன் இணைந்த தொற்று வகையைச் சேர்ந்த இந்த நோய்த்தொற்று ஏற்பட்டால் வெகுவிரைவில் சிறுநீரக இழப்பு ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி தலைநகர் ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாம் நகரங்களில் மெர்ஸ் நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 150 பேர் தங்கி சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இந்நோயினை உரிய முறையில் கட்டுப்படுத்த தவறிய அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி அப்துல்லா அல்-ராபியா கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த கிருமியின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது என்ற நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த இருவர் இந்த நோய்க்கு பலியானதாக சவுதி அரசு கடந்த வாரம் அறிவித்தது. அது மட்டுமின்றி 2 வெளிநாட்டினர் உள்பட 14 பேர் இந்நோய்க்கான சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மேலும் 5 மெர்ஸ் நோயாளிகள் பலியாகினர். அவர்களில் 2 பேர் சவுதிஅரேபியாவை சேர்ந்தவர்கள், 2 பேர் பாலஸ்தீனியர்கள் மற்றும் ஒருவர் வங்காள தேசத்தை சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தலைநகர் ரியாத்தை சேர்ந்த ஒரு குழந்தை, ஜெட்டா நகரை சேர்ந்த 3 பேர் உள்பட மேலும் 8 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் பலியானதாக சவுதி அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் ஆயிரம் பேரை பலி வாங்கிய இந்த மர்ம நோய்க்கு நேற்று வரை சவுதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 102 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக