டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலக கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க வாக்காளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மோடி, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான திறன் வாய்ந்த வேட்பாளர் அல்ல, மாறாக அவர் தீவிர போக்குடைய இந்துத்துவாவின் பிரதிநிதியாவார் என்று தலைமைச்செயலக கூட்டம் தீர்மானித்தது. தீவிரமான இப்பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியின் அரை மனதான நடவடிக்கை, அக்கட்சி மோடிக்கு சவால் விடுக்கும் திறன் இல்லை என்பதையோ அல்லது விருப்பமின்மையையோ எடுத்துக்காட்டுகிறது. இந்நிலையில், வகுப்புவாத பாசிசத்திற்கு எதிராக பணியாற்றும் மற்றும் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காக பாடுபடும் இயக்கம் என்ற நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அரவிந்த் கெஜ்ரிவாலையோ, ஆம் ஆத்மி கட்சியையோ முழுமையாக ஆதரிக்காவிட்டாலும் கூட தங்களின் உயர்மட்ட தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி களமிறக்கியிருப்பதை பாராட்டுகிறது. மோடியை தோற்கடிப்பதற்கான அவர்களுடைய உண்மையான எண்ணத்தின் வெளிப்பாடாகவே இந்த நகர்வை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பார்க்கிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கும், அவரது கட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையூறு அளிப்பதற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலகக் கூட்டம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான கெஜ்ரிவால் போன்றவர்கள் பொது இடத்தில் தொடர்ந்து தாக்கப்படுவது இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு அவமானமாகும். அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் நடவடிக்கைகளால் யார் அஞ்சுகிறார்களோ அவர்களே இத்தகைய கொடிய நடவடிக்கைகள் மூலம் அவரை மிரட்டுகின்றனர். இந்த தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்களோ அவர்கள் அம்பலப்படுத்தப்படவேண்டும்.
அதேவேளையில் குஜராத் மாநிலத்தில் வதோதரா தொகுதியில் இதுவரை மோடிக்கு எதிராக சமமான சிறந்த வேட்பாளர் யாரும் நிறுத்தப்படாததால், அத்தொகுதியில் பா.ஜ.கவுக்கு எதிராக வெற்றிப் பெறும் வாய்ப்புடைய இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரான மதுசூதனன் மிஸ்ரியை வாக்காளர்கள் ஆதரிக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயலக கூட்டம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை ஆதரிக்குமாறு தலைமைச் செயலகக் கூட்டம் மீண்டும் வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக