வியாழன், ஏப்ரல் 24, 2014

தமிழகத்தில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) பலத்த பாதுகாப்புடன் ஒரே கட்டமாக 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 14,000 சி.ஆர்.பி.எஃப். படையினர் உள்பட சுமார் 1.47 லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி தொடங்கி மே 12-ம் தேதி வரை 9 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதில் ஆறாம் கட்டமாக தமிழகம்- 39, புதுச்சேரி- 1, மேற்கு வங்கம்- 6, உத்தரப் பிரதேசம் -12, ராஜஸ்தான்- 5, மகாராஷ்டிரம்- 19, மத்தியப் பிரதேசம்- 10, ஜார்க்கண்ட்- 4, காஷ்மீர்- 1, சத்தீஸ்கர்- 7, பிஹார்- 7, அசாம்- 6 ஆகிய மாநிலங்களில் 117 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. மேலும் பிஹார் (2), மத்தியப் பிரதேசம் (1), தமிழகம் (1) ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு:
தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவையொட்டி, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தேர்தல்களுக்கான டிஜிபி அனுப் ஜெய்ஸ்வால் வெளியிட்ட தகவல்:

மாநிலம் முழுவதும் 60,818 வாக்குச்சாவடிகளில், 34,209 போலீஸ் காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்பட 26,609 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக 5,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அத்துடன், நுண்பார்வையாளர்களால் வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவுக்குப் பிறகு வாக்கு எந்திரங்களை வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் எடுத்துச் செல்வதற்காக பாதுகாப்புப் பணியில் சி.ஆர்.பி.எஃப். படையினர் ஈடுபடுவர் என்று அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் விதமாக, தமிழகத் தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு இன்று காலை 6 மணி வரை அமலில் இருக்கும்.தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுடன், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடக்கிறது.

இந்தத் தேர்தலில், ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. திமுக மற்றும் பாஜக கூட்டணியாகவும், அதிமுக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் தனித்தும் களம் காண்கின்றன. மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 55 பெண்கள் உள்பட 845 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.

தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 5,51,14,867. இதில் பெண்கள் 2,75,21,110 பேர். ஆண்கள் 2,75,18,298 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3,341 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக