சனி, ஏப்ரல் 19, 2014

உ.பியில் தகவல் உரிமை ஆர்வலர் சுட்டுக்கொலை!

 உத்தரப்பிரதேசத்தில் 70 வயதான தகவல் உரிமை ஆர்வலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மாநிலத்தின் ஹாப்பூரில் மங்கட் தியாகி என்ற சமூக ஆர்வலர் இதுவரை சுமார் 14,000 மனுக்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சமர்ப்பித்திருந்தார். இதன் மூலம் அரசுத்துறைகள் பலவற்றில் நடைபெற்ற ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
இந்நிலையில், ஹாப்பூர் மாவட்டம் பங்கண்கடா கிராமத்தில் தன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த மங்கட் தியாகி மீது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தியாகி இறந்தார்.
இது குறித்து ஹாப்பூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ்குமார் சிங் பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ”தியாகியின் குடும்பத்துக்கு உள்ள அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பை அளிக்க மாவட்ட மற்றும் காவல்துறை நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. இன்று முதல் தியாகியின் வீட்டுக்கு வெளியே 2 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தியாகியின் மரணம் தொடர்பாக சிறப்பு நிபுணர் குழுவின் விசாரணையை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம். இந்த விசாரணை விரைவில் தொடங்கும். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைத்து நபர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”தியாகியின் கொலை தொடர்பாக போலீஸாருக்கு முக்கிய துப்பு கிடைத்துள்ளது. விரைவில் இவ்வழக்கு விசாரணை முடிவுக்கு வரும். சில ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தகவல் சட்டத்தின் கீழ் தியாகி மனுக்களைச் சமர்ப்பித்திருந்தார். அவர்களுக்கு இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகிறோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக