திங்கள், ஏப்ரல் 21, 2014

மேக்ஸ்வெல், மில்லர் அதிரடியால் பஞ்சாப் வெற்றி

ராஜஸ்தான்- பஞ்சாப் அணி மோதும் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 7-வது போட்டி சார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பீல்டிங் தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த நாயர்- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரகானே 12 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ஜாம்சன் களம் இறங்கினார். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள்.20 பந்தில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 23 ரன் எடுத்திருந்த போது நாயர் அவுட் ஆனார். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு ஜாம்சனுடன், ராஜஸ்தான் கேப்டன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். ஜாம்சனும், வாட்சனும் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். இதனால் பந்து நாலாபுறமும் பறந்தது.

வாட்சன் 29 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஏ.ஆர். பட்டேல் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பின்னி 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஜாம்சன் 34 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 52 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.அடுத்து வந்த ஸ்மித் 27, பால்க்னர் 8 ரன் அடிக்க ராஜஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன் குவித்தது.

பஞ்சாப் அணி சார்பில் பட்டேல், ஜான்சன், அவாணா, கார்த்திக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணியின் சேவாக்- புஜாரா தொடக்க வீரரர்களாக களம் இறங்கினர். சேவாக் 2 ரன் எடுத்து ஏமாற்றினார். 2-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் விர்த்திமான் சஹா ஜோடி சேர்ந்தார். இவரும் 2 ரன் எடுத்த திருப்தியில் பெவிலியன் திரும்பினார்.

3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் கடந்த போட்டியில் 95 ரன் குவித்த மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். கடந்த போட்டியை போல் இதிலும் தனது அதிரடியை காட்டினார் மேக்ஸ்வெல். இதனால் பந்து அடிக்கடி பவுண்டரி கோட்டிற்கு மேல் பறந்தது.ஒருமுனையில் மேக்ஸ்வெல் வாணவேடிக்கை நடத்தினாலும் மறுமுனையில் புஜாரா ஆமை வேகத்தில் ரன் எடுத்தார். பஞ்சாப் அணி 12 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் 45 பந்தில் 89 ரன் குவித்து ரிச்சர்ட்சன் பந்தில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி 6 சிக்சர் அடங்கும். அடுத்து புஜாராவுடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது பஞ்சாப் அணி வெற்றி பெற 37 பந்தில் 66 ரன் தேவைப்பட்டது.

15-வது ஓவரில் 5 ரன் கிடைத்தது. 16-வது ஓவரை தம்பே வீசினார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு ஒரு சிக்சருடன் 11 ரன் கிடைத்தது. அப்போது பஞ்சாப் அணிக்கு 24 பந்தில் 49 ரன் தேவைப்பட்டது. 17-வது ஓவரை பால்க்னர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன் கிடைத்தது. 18 பந்தில் 37 ரன் தேவைப்பட்டது.

18-வது ஓவரை குல்கர்னி வீசினார். முதல் பந்தில் புஜாரா ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தை சந்தித்த மில்லர் அதை சிக்ஸராக மாற்றினார். 3-வது பந்தில் 2 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்தையும் சிக்சருக்கு பறக்க விட்டார். இந்த ஓவரில் 27 ரன் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் அணிக்கு 12 பந்தில் 10 ரன்னே தேவைப்பட்டது.

19-வது ஓவரை பால்க்னர் வீசினார். இந்த ஓவரிலும் புஜாரா முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர் தலா 2 ரன் எடுத்தார். 4-வது பந்தை இமாலய சிக்ஸருக்கு தூக்கி அணியை வெற்றி பெற செய்தார். அத்துடன் அவர் 19 பந்தில் 6 சிக்ஸருடன் 51 ரன் எடுத்தார். இதனால் 6 பந்து மீதமிருக்க பஞ்சாப் அணி 193 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி சார்பில் ரிச்சார்ட்சன், குல்கர்னி, பால்க்னர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் பஞ்சாப் 2-வது வெற்றியை பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக