திங்கள், ஏப்ரல் 21, 2014

வாக்காளர் பட்டியலில் இருந்து மகாராஷ்டிராவில் 60 லட்சம் பேர் நீக்கம்?

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 19 மக்களவை  தொகுதிகளுக்கு வரும் 24ம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் சுமார் 3.17 கோடி வாக்காளர்கள்  பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், ஒரு தொகுதியில்  பதிவு செய்யப்பட்டு, பிறகு வேலை காரணமாக வேறு தொகுதிகளுக்கு  இடம் மாறியவர்கள் உள்பட சுமார் 60 லட்சம் பெயர்கள் வாக்காளர்  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்கள் கடும்  அதிர்ச்சியடைந்துள்ளனர். புனே தொகுதியில் மட்டும் ஒரு லட்சம்  பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி, அங்கு மறுதேர்தல் நடைபெற  வேண்டும் என்று பா.ஜ. உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகள், தேர்தல்  ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. 

ஆனால், இதை மாநில தலைமை தேர்தல் அதிகாரி நிதின் காத்ரே  மறுத்துள்ளார். ‘ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் வீடு, வீடாக  ஆய்வு செய்ததில் அங்கு குடியிருக்காதவர்களின் பெயர்கள் கடந்த 6  மாதங்களுக்கு முன் சட்ட விதிப்படி நீக்கப்பட்டு உள்ளன. திருத்தி  அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளிடமும்  இணையதளத்திலும் வெளியிடப்பட்டு உள்ளன‘ என்று அவர்  மும்பையில் கூறினார். மகாராஷ்டிர மாநிலத்தில் 48 மக்களவை  தொகுதியிலும் முதல்முறையாக வாக்களிப்பவர்களின் பெயர்களும்  நீக்கப்பட்டு உள்ளன என்று ஏராளமான புகார்கள் தேர்தல் கமிஷனுக்கு  வந்துள்ளன. 

புனேவில் பாலிவுட் நடிகர் அமோல் பாலேகரின் பெயர் விடுபட்டுள்ளது.  இது குறித்து அவர் நேற்று புனே போலீசில் புகார் செய்துள்ளார்.  அவரது புகாரை தேர்தல் கமிஷனுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.  இதேபோல் அவுரங்காபாத், ரத்தினகிரி மற்றும் தானேவிலும்  ஏராளமானவர்களின் பெயர்கள் விடுபட்டு உள்ளதாகவும் நீக்கப்பட்டு  உள்ளதாகவும் புகார்கள் குவிந்துள்ளன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக