சனி, ஏப்ரல் 19, 2014

இலங்கை ராணுவத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் ஒலு பகுதி முஸ்லிம்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது பகுதியில் இருக்கும் கல்வி நிறுவன கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு அந்த பிரதேசத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றை அடுத்து பொது மக்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் எதிரொலியாகவே வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி இந்த ஆர்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.இந்த சம்பவத்தையடுத்து வியாழன் இரவு அந்த பிரதேசத்தில் உருவான பதட்ட நிலை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.
வியாழனன்று இரவு வீடொன்றிற்குள் நுழைந்து பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் கடற்படை வீரரொருவரை உள்ளுர் மக்கள் மடக்கிப் பிடித்ததாகவும், அந்த தகவலறிந்து முகாமிலிருந்து அங்கு விரைந்து வந்த கடற்படையினரால் குறிப்பிட்ட படை வீரர் மீட்டுச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்தே இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலைது ஏற்பட்டதாகவும் உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த சம்பவத்தையடுத்து அங்கு விரைந்த அக்கரைப்பற்று காவல் துறையினரிடம் குறித்த நபரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் செரிந்து வாழும் பகுதியிலுள்ள குறித்த கடற்படை முகாமினால் மக்களின் இயல்பு நிலைக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதாக கூறும் அட்டாளைச்சேனை பகுதி உள்ளுராட்சி சபை தலைவரான எம். ஏ. அன்ஸில், அந்த முகாம் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட கடற்படை வீரர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் காவல் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக