வியாழன், ஏப்ரல் 24, 2014

கார் கவிழ்ந்து உருண்டது: ஒய்எஸ்ஆர் காங்.பெண் எம்.எல்.ஏ. உயிர் ஊசல்

ஆந்திர மாநிலம் ஆலகண்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஷோபா நாகி ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். கட்சியை சேர்ந்த இவர் நடைபெறும் தேர்தலில் ஆலகண்டா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

நேற்று நந்தியாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தேர்தல் பிரசாரம் செய்தார். இதில் ஷோபாநாகி ரெட்டி பங்கேற்று விட்டு நள்ளிரவு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். தூபகுண்டம் என்ற இடத்தில் கார் வரும் போது ரோட்டில் நெல் கொட்டப்பட்டு இருந்தது. ஒரு இடத்தில் நெல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த டிரைவர் திடீர் பிரேக் போட்டார். ஆனால் கார் நெல் குவியலில் மோதி ரோட்டில் கவிழ்ந்து 3 முறை உருண்டது.

இந்த விபத்தில் காரில் கதவு திறந்தது. முன் இருக்கையில் இருந்த ஷோபா ரோட்டில் உருண்டு விழுந்து படுகாயம் அடைந்தார். மேலும் டிரைவர் உள்பட காரில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து அனைவரையும் மீட்டு உள்ளூர் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்து ஐதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த ஷோபா நாகி ரெட்டி உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவரது தலையில் பலத்த அடிபட்டுள்ளது. கழுத்து எலும்பு முறிந்தது. கோமா நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷோபா கணவர் பூமா நாகி ரெட்டி நந்தியாலா தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக