புதன், ஏப்ரல் 23, 2014

தென் கொரிய கப்பல் விபத்து: இதுவரை 104 பேரின் உடல்கள் மீட்பு

தென் கொரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நேரிட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் குறித்த தகவல்கள் தெரியவில்லை. இதில் பெரும்பாலானோர் பள்ளி மாணவர்கள் ஆவர்.

தென் கொரியாவின் சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து சீவொல் என்ற கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்ட போது திடீரென மூழ்க ஆரம்பித்தது. உதவி கோரி இந்தப் கப்பலில் இருந்து வெளியான சிக்னலை பார்த்து, 100 கடலோர காவலர்களும், கடற்படை கப்பல்களும், மீன்பிடி கப்பல்களும், 18 ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து உதவி அளித்தனர். இந்த கப்பலில் பயணித்த 300 பேரில் 200க்கும் மேற்பட்டோர் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள்.

கடந்த சில நாட்களாக நடந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 40 ஆழ்கடல் வீரர்கள் இதுவரை 104 பேரின் உடல்கள் மீட்டுள்ளனர். இவர்களின் உடலை கடலோர காவல்துறை அதிகாரிகள், தகவலுக்காக காத்திருந்த பயணிகளின் உறவினர்களிடம் கொண்டு வந்து சேர்த்தனர். மீட்கப்பட்ட உடலிலிருந்து எந்த விதமான அடையாளங்களும் காண முடியாத நிலையில், உயரம் முடியின் நீளம் மற்றும் உடை போன்ற சில அடையாளங்களை கொண்டு மட்டுமே உறவினர்கள் உடல்களை பெற்று செல்கின்றனர். மீட்கப்பட்ட உடல்களை கொண்டு வந்து சேர்க்கும் டெக் பகுதியில் கேட்கும் உறவினர்களின் அழுகுரல்கள் அங்கு இருக்கும் அனைவரையும் பாதிக்கும் வகையில் உள்ளது.

பலியான மாணவர்களுக்கு நாளை இறுதி சடங்குகளை நடத்த இருப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக தென் கொரிய கப்பலின் கேப்டன் லீ மற்றும் கப்பல் நிர்வாகத்தை சேர்ந்த இருவர் மீது பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி உள்ளனர். மேலும் இவர்களின் செயல் திட்டமிட்ட கொலைக்கு ஒப்பிடக்கூடியது என்று தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹையி தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக