செவ்வாய், ஏப்ரல் 22, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு: பிரவீன் தொகாடியா மீது வழக்கு

குஜராத் மாநிலம் பாவ் நகரில் மேகானி சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். இந்துக்கள் அதிகம் வாழும் அந்த பகுதியில் முஸ்லிம் ஒருவர் எப்படி வீடு வாங்கலாம் என்று விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தளம் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தின்போது விசுவ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா பேசுகையில், ‘‘இந்த வீட்டை வாங்கி குடியேறியுள்ள முஸ்லிம், அடுத்த 48 மணி நேரத்துக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும். இல்லையெனில் வீட்டை முற்றுகையிடுவோம்’’ என்றார்.

இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரவீன் தொகாடியா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் நேற்று மாலை பிரவீன் தொகாடியாவின் பேச்சு அடங்கிய வீடியோ பதிவை பார்த்தனர். பிறகு பிரவீண் தொகாடியா மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதன் பேரில் நேற்றிரவு குஜராத் போலீசார் பிரவீன் தொகாடியா மீது வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தக்கட்டமாக பிரவீன் தொகாடியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே பிரவீண் தொகாடியா தெரிவித்த கருத்தால் பா.ஜ.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், பிரவீண் தொகடியா உண்மையில் அப்படி பேசி இருந்தால் அதை பா.ஜ.க. ஏற்காது. அவரது கருத்து பா.ஜ.க.வின் கருத்து அல்ல. அது ஏற்புடை யது அல்ல.
இந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதற்கு குஜராத் அரசு கட்டுப்படும் என்றார். இதற்கிடையே பிரவீண் தொகடியா மீது உரிய நடடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளும் வலி யுறுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக