சமீபத்தில் மோடியின் 'குஜராத் மாடல்' குறித்து 'மிட்டாய் மாடல்' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த மோடி, 'ராகுல் சிறுகுழந்தை போல நடந்து கொள்வதாக' விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், பீகாரின் சிறுபான்மையினர் நிறைந்த பகுதியான கிசான்கஞ்சில் இன்று தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி பேசியதாவது:-
மக்களை முட்டாளாக்குவதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு மாநிலத்திற்கான வளர்ச்சி முன்மாதிரி எல்லா இடங்களுக்கும் பொருந்தாது. குஜராத் வளர்ச்சி முன்மாதிரி என்பது மிட்டாய் அல்லது பலூன் போன்றதுதான். அது பொது மக்களின் பணத்தை கொள்ளையடித்து டாடா, அதானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கு கொடுப்பதே தவிர வேறொன்றுமில்லை.
சாதாரண மனிதர்கள் வங்கியில் 12 சதவீத வட்டிக்கு கடன் வாங்கிவரும் நிலையில், மோடி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் திட்டத்திற்காக வெறும் 0.1 சதவீத வட்டிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். ஒவ்வொரு நானோ காருக்கும் ரூ.40 ஆயிரத்தை குஜராத் அரசு நிதியுதவியாக கொடுத்துள்ளது.
பீகாரின் பர்னியா மாவட்ட பரப்பளவிற்கு சமமான, குஜராத்தின் ஏழை விவசாயிகளுக்கு சொந்தமான சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அதானி என்ற ஒரு தனிநபருக்கு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற மலிவான விலைக்கு குஜராத் முதல்வர் கொடுத்துள்ளார்.
மோடி தனக்கு எல்லாம் தெரியும் என்று கூறிக்கொள்கிறார். அவரை பொறுத்த வரையில், குஜராத் வளர்ச்சிக்கு அவரைத் தவிர வேறு யாரும் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. அதையே தான் இப்போது நாடு முழுவதற்கும் சொல்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுலின் இன்றைய பிரசாரம், பீகார் மாநிலத்தில் அவருடைய இரண்டாவது தேர்தல் பிரசாரம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக