ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்

அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில், குடியிருப்புகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடைக்கு 50 மீட்டர் தூரத்தில் அம்மன் கோயில் உள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் ஆகியோருக்கு இதனால் மிகுந்த தொந்தரவு ஏற்படுகிறது.

கடைக்கு வருபவர்கள் மிகுந்த சத்தம் எழுப்புகின்றனர், சண்டை போடுகின்றனர். இது பொது மக்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனைச் சட்ட விதிகள் இந்தக் கடையில் மீறப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தொந்தரவாகவும் உள்ள இநத மதுபானக் கடையை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணையின்போது டாஸ்மாக் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.முத்துராஜ் ஆஜராகி, தமிழ்நாடு மதுபான சில்லைரை விற்பனைச் சட்டம் 2003-விதிகள் ஏதும் மீறப்படவில்லை. முறையான கட்டடத்தில்தான் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது என வாதாடினார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பார்வையிட்டு, தனிப்பட்ட முறையில் திருப்திகரமாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.

அவரது ஆய்வில் டாஸ்மாக் கடை விதிகள் பின்பற்றவில்லையென்றால், நான்கு வாரங்களுக்குள் அந்தக் கடையை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக