வியாழன், ஏப்ரல் 24, 2014

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வெற்றிக்கனி யாருக்கு?

நாகப்பட்டினம் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 19 பேர் போட்டியிட்டாலும் நான்கு முனைப் போட்டிதான் நிலவுகிறது. அதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பார்கள் தான் இறுதிவரை தாக்குப்பிடித்து களத்தில் இருக்கிறார்கள்.

இவர்களோடு சமாஜ்வாடி, பகுஜன் ஜமாஜ், டிராபிக் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) ஆகியவற்றின் வேட்பாளர்களும் குறிப்பிடத் தகுந்த வேட்பாளர்களாக உள்ளனர். அத்தனை பேரிலும் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள், ஜெயலலிதாவின் பிரச்சாரம், தனிப்பட்ட வாக்குவங்கி ஆகியவற்றால் அதிமுக வேட்பாளர் பாரதிமோகன் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.

பாரதிமோகனுக்காக நடிகர், நடிகைகள், ஸ்ரீதர் வாண்டையார், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் தொகுதிக்குள் சுற்றிச்சுற்றி வாக்கு சேகரித்திருக்கிறார்கள். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் தொகுதியின் பொறுப்பாளர்களில் ஒருவர் என்பதால் கட்சிக்காரர்களை உரிமையோடு உசுப்பி, உசுப்பி உற்சாகப்படுத்தினார். கடைசி கட்ட கவனிப்பும் பலமாகவே இருந்ததாகச் சொல்கின்றனர்.

வன்னியர் வாக்கு, கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவற்றின் உதவியோடு பாமக வேட்பாளர் அகோரமும், இஸ்லாமிய வாக்கு வங்கி, திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் பலம் என்ற தாங்கு சக்தியால் மனிதநேய மக்கள் கட்சியின் ஹைதர் அலியும் சம பலத்தில் கச்சை கட்டுகிறார்கள். ஹைதர் அலிக்காக ஸ்டாலின், கருணாநிதி, ஜவாஹிருல்லா, கி.வீரமணி, காதர்மொய்தீன், திருமாவளவன் ஆகியோர் வரிசைகட்டி வந்து வாக்கு கேட்டார்கள்.

தொகுதிக்குள் நன்கு அறிமுகமானவரும், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெயர் சொல்லும்படியான திட்டங்களை செய்திருப்பவருமான காங்கிரஸ் கட்சியின் மணிசங்கர் அய்யர் இவர்களோடு தன் சொந்த தெம்பில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஜி.கே.வாசனும், தங்கபாலுவும் தங்கள் பங்குக்கு இவருக்காக பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் நால்வரைத்தவிர மற்றவர்கள் சாதாரணமான போட்டியாளர்கள் தான். அவர்கள் வாங்கும் வாக்கு இந்த நால்வரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாகக் கூட இருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக