வெள்ளி, ஏப்ரல் 18, 2014

திண்டுக்கலில் தே.மு.தி.க. பேனர் கிழிப்பு: போலீஸ் நிலையம் முற்றுகை

பா.ஜனதா கூட்டணி சார்பில் திண்டுக்கல் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முகிலரசன் தலைமையில் கூட்டணி கட்சியினர் திண்டுக்கல் சவேரியார் பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனர்.


அந்த பிரசாரத்தை முடித்து விட்டு முத்தழகுபட்டி செல்வதற்காக பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் வழியாக வந்தனர். அவர்கள் வந்த வாகனத்தில் கட்சி பாடல்களை ஒலிபரப்பிய படியும், முன்னால் மோட்டார் சைக்கிள்களில் கட்சி தொண்டர்கள் அணிவகுத்தும் சென்றனர். அப்போது எதிரே இறந்த ஒருவரின் சடலத்தை எடுத்துக்கொண்டு பள்ளி வாசலுக்குள் முஸ்லிம் அமைப்பினர் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் இறந்தவர் உடலை கொண்டு செல்வதால் பாடலை நிறுத்தும்படி கட்சியினரை கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் பாடலை நிறுத்தவில்லை.இதனால் முஸ்லிம் அமைப்பினருக்கும் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தே.மு.தி.க. வாகனத்தில் இருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து எரிந்தனர்.

இதனால் கட்சியினர் கடுமையாக சத்தம் போட தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது.
இந்த கைகலப்பில் தே.மு.தி.க. பேச்சாளர் முகிலரசன் உள்பட 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தே.மு.தி.க.வினர் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து பதட்டம் ஏற்படவே அங்கு போலீசார் குவிக்கப் பட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக