டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு தீவிரவாத கைது நாடகம் நடத்தி பின்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பால் அப்துல் வாஹித் விடுவிக்கப்பட்டாலும், அவர் புதிய நெருக்கடிகளை சந்தித்துவருகிறார்.
இந்திய முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் 23-ஆம் தேதி அப்துல் வாஹித் மற்றும் அவரது நண்பர் யாஸிர் அம்மார் ஆகியோரை டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு டெல்லி ஜாமிஆ நகரில் இருந்து கைதுச் செய்தது. ஆனால், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் சாலை தடுப்பு போராட்டம் காரணமாக போலீஸ் அவர்களை விடுவித்தது.
பொய் வழக்கில் சிக்காமல் தப்பித்தாலும், கல்லூரி நிர்வாகம் தற்போது அப்துல் வாஹிதை தீவிரவாதியாக சித்தரித்துள்ளது. அப்துல் வாஹித் பயின்று வந்த ஜெய்ப்பூர் க்ளோபல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டெக்னாலஜி(ஜி.ஐ.டி) நிர்வாகம், அப்துல் வாஹித் தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் வரை கல்லூரி வளாகத்திற்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. டெல்லி போலீஸ் வழங்கிய நற்சான்றிதழ் போதாது என்பது கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. ராஜஸ்தான் போலீஸ் தீவிரவாத குற்றம் சுமத்தி முன்னர் கைதுச் செய்த 2 பி.டெக் மாணவர்களை இதே கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்தது.
தங்களுடைய பிள்ளைகள் நிரபராதிகள், அவர்களை கல்லூரியில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் ஜி.ஐ.டிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், நிரபராதிகள் என்ற ஆவணத்தை தந்தால் மட்டுமே மீண்டும் அவர்களை சேர்த்துக்கொள்வோம் என்று ஜி.ஐ.டியின் சேர்மன் ஆனந்த் சிங்கால் தெரிவித்துள்ளார்.
புனித உம்ராவை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு செல்லும் வழியில் யாஸிர் அம்மார் 22-ஆம் தேதி டெல்லிக்கு வந்தார்.அம்மாரும், அப்துல் வாஹிதும் தனது நண்பர் தானிஷ் வாடகைக்கு தங்கியிருந்த அபுல் ஃபஸல் ப்ளாட்டில் அன்றைய தினம் தங்கியுள்ளனர்.மறு நாள் டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவு இருவரையும் காவலில் எடுத்தது.
போலீஸ் விடுவித்த பிறகு அம்மார் உம்ராவுக்குச் சென்றார். தற்போது சொந்த ஊரான தன்பாதிற்கு திரும்பி வந்த பிறகு போலி தீவிரவாத லேபல் பெரியதொரு நெருக்கடியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. அயல்வாசிகளும், இதர உறவினர்களும் அம்மாரின் குடும்பத்தை தனிமைப்படுத்தியுள்ளதாக உறவினர் மிஃராஜ் தெரிவித்தார். தனது சந்தித்த அனுபவத்தை தான் தற்போது இந்த இளைஞர்கள் அனுபவிப்பதாக டெல்லி போலீஸின் தீவிரவாத வேட்டையில் கைதுச் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஆமிர் கான் தெரிவித்தார். பல்வேறு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட ஆமிர் கான் 14 ஆண்டுகள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டார். இறுதியில் நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என்று அனைத்து வழக்குகளில் இருந்து விடுவித்த பிறகு போலி தீவிரவாத முத்திரையை இன்னும் அவர் மீது இருந்து நீங்கவில்லை. நேர்மையாக உழைத்து சம்பாதிக்க பல்வேறு நிறுவனங்களை அணுகியபோதும் யாரும் தனக்கு வேலை தரவில்லை. இந்த மாணவர்களுக்க்கும் யாரும் வேலை கொடுப்பார்கள் என்று தோன்றவில்லை என்று ஆமிர் கான் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக