சென்னையில் நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தாலும், 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் சுமார் 30 வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணிவரை வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர். ஓட்டுப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் இருந்து, ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.
வடசென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணப்படும், சென்னை ராணிமேரி கல்லூரிக்கும், மத்திய சென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் லயோலா கல்லூரிக்கும், தென் சென்னை ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடமான அண்ணாபல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு, எந்திர துப்பாக்கியுடன் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் காவல் காக்கிறார்கள். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா காட்சிகள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.
கேமரா காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, டி.வி.மானிட்டரில் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக ஒளி வெள்ளத்தை கக்கும் ராட்சத விளக்குகளும் அங்கு பொருத்தப்பட்டுள்ளன. அங்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ஜெனரேட்டர் வசதி இருக்கும். 2-வது அடுக்கில் எந்திர துப்பாக்கியுடன் தமிழக ஆயுதப்படை போலீசார் இருப்பார்கள். 3-வது அடுக்கில் உள்ளூர் போலீசார் இருப்பார்கள்.
ஓட்டு எண்ணும் இடங்களில் ஒரு துணை கமிஷனர் தலைமையில் 500 போலீசார், 24 மணி நேரமும் 3 சிப்டுகளாக காவல் பணியில் இருப்பார்கள். தீயணைக்கும் வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள். மொத்தத்தில், ஓட்டுப்பதிவு எந்திரங்களை கோழி, முட்டையை அடைகாப்பது போல, ஓட்டும் எண்ணும் நாளான மே மாதம் 16-ந்தேதி வரை போலீசார் காவல் காப்பார்கள், என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக