யோகா முகாம்கள் குறிப்பிட்ட சில கட்சிகளுக்காக பிரசாரம் செய்ய பயன்படுத்தப்படுமானால், அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் ஆகியோரின் நிகழ்ச்சிகள், பாஜகவுக்கும் அதன் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் ஆதரவாக பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த விவகாரம் குறித்து இம்மாதம் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவுகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளோம்.
யோகா முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் இதற்கு முன் நடத்திய நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகாம்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக