ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆப்கானிஸ்தானில் 2ம் சுற்று அதிபர் தேர்தல்

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 44.9 சதவீதம் வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளரான உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அஷ்ரப் கனி 31.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். 
மேலும் சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, அவற்றில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகள் நடந்து வருகின்றன. கூடிய விரைவில் வழக்கு முடிந்து, வரும் மே மாதம் 14-ம் தேதி முழு தேர்தல் முடிவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களின்படி, 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுபவர்தான் அதிபராக பொறுப்பேற்றுக் கொள்ள முடியும். மே மாதம் 14-ம் தேதி வெளியாகும் இறுதி முடிவுகளின்படி, இதிலும் எந்த வேட்பாளரும் 50 சதவீதம் ஓட்டுகளை பெறாத நிலையில், வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் தேர்தல் கமிஷனர் அஹமத் யூசுப் நுரிஸ்தானி அறிவித்துள்ளார். 

அந்நாட்டின் வழக்கப்படி, முதல் இரண்டு இடத்தை பிடித்த வேட்பாளர்களுக்குள் கருத்தொற்றுமை உருவானால், இருவரும் அதிபர்- துணை அதிபராக ஆட்சியை வழிநடத்தலாம். ஆனால், அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதல் இடத்தை பிடித்த அப்துல்லா அப்துல்லா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். 

இரண்டாம் சுற்றில் ஒரு கை பார்த்து விடுவது என்ற நம்பிக்கையில் இதில் போட்டியிடப் போவதாக அஷ்ரப் கனி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக