செவ்வாய், ஏப்ரல் 29, 2014

மோடி பேச்சில் கண்ணியம் இல்லை: ராகுல் சரமாரி தாக்கு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, எதிரணி தலைவர்களை விமர்சித்துப் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று பஞ்சாப் மாநிலத்தில் தமது கட்சி வேட்பாளர் மன்ப்ரீத் சிங் படாலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியது:
"பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, 'குஜராத் மாதிரி’ என்பதற்கான பெருமைகளை அவரே பெற்றுக்கொள்ள நினைக்கிறார். 'அமுல்' பிராண்ட் சாதனை, குஜராத்தின் லட்சக்கணக்கான மக்களின் உழைப்பு. முக்கியமாக அந்த மாநில பெண்கள் இதற்காக உழைத்துள்ளனர். ஆனால், அதனை அவர் பெருமையாக பேசிக் கொள்கிறார்.

அதே போல, ஊழல் விவகாரத்திலும் அவர் இரட்டை வேடம் போடுகிறார். அவர் எதிரணி தலைவர்களை தொடர்ந்து கண்ணியம் இல்லாமல் விமர்சித்து வருகிறார்கள்.

நீங்களே (மக்கள்) குஜராத் முதல்வரின் பேச்சை பாருங்கள். என்னுடைய பேச்சையும் பாருங்கள். சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் பேச்சையும் பாருங்கள். எங்களின் பேச்சில் அன்பும், மதிப்பும் மட்டுமே நிறைந்துள்ளது. நீங்கள் தேர்வு செய்து அனுப்பியவர்தான் பிரதமர் மன்மோகன் சிங், கடந்த 10 ஆண்டுகளில் அவருடைய பேச்சைக் கேட்டு இருப்பீர்கள். நாங்கள் எப்போது வெறுப்பு தன்மையுடன் பேசுவதே இல்லை.

ஆனால், பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் பேச்சில் எப்போதும் கண்ணியம் இருந்ததில்லை. அவர்களால் நன்றாக பேசவும் முடியாது. மக்களுக்கு நன்மை செய்யவும் முடியாது.

பாஜகவினர் தொடர்ந்து மோடியை மட்டும் முன்னிறுத்துகின்றனர். அவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக குஜராத்தில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படாதது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

குஜராத் மற்றும் பஞ்சாப் மக்கள் உழைப்புக்கு பெயர் போனவர்கள். ஆனால் இந்த நாட்டு மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக எதுவுமே செய்யாதது போலவும், மோடிதான் அந்த மாநிலத்தையே முன்னேற்றியதாகவும் பேசுகின்றனர்.
2004-ல் பாஜக வாடிக் கிடந்த விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பார்த்து, இந்தியா ஒளிர்கிறது என்றனர். அப்போது சில தொழிலதிபர்கள்தான் முன்னேறினர். அந்தக் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜனுக்கு, நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த சில அரசு நிறுவனங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
மீட்டருக்கு ரூ.1 என்ற அளவில் அதானி குழுமத்திற்கு சுமார் 45,000 ஏக்கர்களை மோடி வாரி வழங்கி உள்ளார். டாடா நானோவுக்காக 1 பைசா வட்டியில் 25 ஆண்டுகளுக்கு கடன் உதவியாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குஜராத்தில் கல்விக்காக ரூ.8 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித் தரும் மின்சாரம், சில நிறுவனங்களுக்கு தள்ளுபடி விலையில் தரப்படுகிறது. நான் தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று கூற வரவில்லை. ஆனால், ஏழை மக்களையும் கொஞ்சம் பாருங்கள் என்கிறேன்.

மத்திய அரசு ரூ.30,000 கோடியை ஊரக வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கியது. குஜராத் அரசு இதற்கு ஈடான தொகையை அதானி நிறுவனத்திற்கு ஆதாயமாக வழங்கி உள்ளது.

நாங்கள் ஏழைகளின் மகன்கள் தொழிலதிபராகவும், விவசாயிகளின் பிள்ளைகள் விமானியாக பறக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் கனவும் நிறைவேற ஆசைப்படுகிறோமே தவிர, சில தொழிலதிபர்கள் மட்டுமே வளர்ச்சி பெற விரும்பவில்லை" என்றார் மோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக