வியாழன், மே 01, 2014

உ.பி: குழப்பத்தில் முஸ்லிம் வாக்காளர்கள்!

முஸஃபர் நகர் கலவரத்தால் முலாயம்சிங் யாதவின் கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் மீது நம்பிக்கையை இழந்த உத்தரபிரதேச மாநில முஸ்லிம் வாக்காளர்கள் தர்மசங்கடத்தில் உள்ளனர்.
கடந்த 3 முறை பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிப்பதா? முஸஃபர் நகர் கலவரம் தீவிரமடைந்த பிறகும் அதனை ஒடுக்கவோ, முஸ்லிம்களை பாதுகாக்கவோ சிறுவிரலையும் அசைக்காத அகிலேஷ் யாதவ் தலைமையில் உ.பியை ஆளும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதிக் கட்சியை ஆதரிப்பதா? என்ற குழப்பம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சாம்பல் மக்களவை தொகுதியில் முஸ்லிம் வாக்காளர் இனாமுர் ரஹ்மான் கூறியது:மாயாவதி மீண்டும் பா.ஜ.கவின் பக்கம் சேர வாய்ப்புள்ளது. சாம்பலில் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர் டாக்டர் ஷஃபீகுர்ரஹ்மான் பர்கிற்கு வாக்களித்தேன். சமுதாய விவகாரத்தில் சிறிதளவேனும் ஆர்வம் உள்ளதால் அவருக்கு வாக்களித்தேன் என்று இனாமுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மாநிலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் இதே கருத்தையே பிரதிபலிக்கின்றனர். அரசியல் கட்சிகள் மீது அவர்கள் கோபத்தில் உள்ளனர். சரியான மாற்றுக் கட்சியை தேர்ந்தெடுக்க முடியாத சூழலில் அவர்கள் உள்ளனர். பல அரசியல் கட்சிகளுக்கும் முஸ்லிம்கள் மாறி, மாறி வாக்களித்துவிட்டனர்.நிராசையே மிஞ்சியது. எனினும் இக்கட்சிகளில் ஓரளவு சிறந்ததாக சமாஜ்வாதிக் கட்சியையே கருதுகின்றனர். முஸஃபர் நகர் கலவரத்தையும், 2002 குஜராத் கலவரத்தையும் ஒப்பீடுச் செய்ய இவர்கள் தயாரில்லை. அதேவேளையில், பெரும்பாலான முஸ்லிம்களும் முலாயம்சிங் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
முஸ்லிம் வாக்குகள் சமாஜ்வாதிக் கட்சிக்கும், பகுஜன்சமாஜ் கட்சிக்கும் பிரிந்துவிட்டால் பா.ஜ.க ஆதாயம் பெற்றுவிடும் என்று பெரும்பாலான முஸ்லிம் வாக்காளர்களின் கவலையாகும். பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி இவர்களில் யாரை நம்பலாம் என்பதில் முஸ்லிம் வாக்காளர்களிடம் சரியான முடிவு இல்லை.காங்கிரஸ் கட்சியோ மிகவும் பலகீனமான நிலையில் உள்ளது. இம்முறை சற்று மாறுதல் உண்டு. ஆனால், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளை முறியடித்து முன்னேற காங்கிரசுக்கு திறன் இல்லை.
கடந்த 6 கட்டங்களாக மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.அவற்றில் பல தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்குகளே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றன. மாநிலத்தில் உள்ள இந்து வாக்குகள்,’மோடி அலை’ என்ற மாயை மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம் வாக்குகள் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகளுக்கிடையே பிரிகிறது. மேலும் சில மாவட்டங்களில் சிறிய கட்சிகளும் களத்தில் உள்ளன. பீஸ் கட்சி, ராஷ்ட்ரீய உலமா கவுன்சில், கவ்மீ ஏகதா தள் உள்ளிட்ட கட்சிகளும் சில தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும்.ஆம் ஆத்மி கட்சியையும் சில முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக