வெள்ளி, ஏப்ரல் 04, 2014

காவல்துறை, அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: சமாஜ்வாதிக் கட்சியின் தேர்தல் அறிக்கை!

மத்தியில் காங்கிரஸ், பாஜக அல்லாது சமாஜ்வாதி கட்சி அங்கம் வகிக்கும் அரசு அமைந்தால், காவல்துறை மற்றும் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சமாஜ்வாதி மாநிலம் லக்னௌவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

அரசுத்துறைகளில் முஸ்லிம்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்படும்.காவல்துறை பணிகளில் முஸ்லிம்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

வகுப்புவாத கலவரத்தை ஒடுக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும்.
ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.உயர்சாதியினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக உயர்சாதியினர் நல ஆணையம் ஏற்படுத்தப்படும். 17 பிற்படுத்தப்பட்ட சாதியினர், எஸ்.சி. பிரிவின்கீழ் கொண்டு வரப்படுவர்.

அரசு அலுவலர்கள், கீழமை மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆசிரியர்களின் ஓய்வு வயது 65 ஆக அதிகரிக்கப்படும். விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும். எக்ஸ்ரே, எம்ஆர்ஜ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள், ஏழைகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக