வியாழன், ஏப்ரல் 03, 2014

புதுவை காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. விலகல்

புதுவை காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். மனோகர் தற்போது காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச்செயலாளராக உள்ளார். 


இவர் தனது ஆதர வாளர்களான காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் பிரிவு துணைத்தலைவர் பக்தவச்சலம், மாவட்ட செயலாளர் கணேசன், உப்பளம் வட்டார துணைத்தலைவர் குப்புசாமி, வட்டார பொதுச்செயலாளர்கள் லசார், விஷ்ணு, வட்டார இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வீரராகவன், மங்கலம் வட்டார செயலாளர் அன்பழகன் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து மனோகர் நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவை காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மிகுந்த மனவேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கும், செயல்பாட்டிற்கும் ஒத்துப்போகாமல் புதுவை காங்கிரஸ் தன்னிச்சையாக செயல்படுகிறது.
கட்சியினரிடம் நேரடியாக விருப்ப மனு பெற்றே பாராளுமன்ற வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதுதான் காங்கிரஸ் கட்சியின் நடைமுறை வழக்கம். ஆனால் புதுவை காங்கிரஸ் கட்சியில் கடந்தமாதம் நடந்த செயற்குழுவில் வருகை பதிவேட்டில் அனைவரிடமும் கையெழுத்து வாங்கி பாராளுமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிடுவார் என தீர்மானத்தை வாசித்தனர். 
இதுதொடர்பாக யாரிடமும் எந்த கருத்தும் கேட்கவில்லை. ஒரு குறிப்பிட்ட நபரை முன்னிறுத்தி, யாரையும் கலந்து பேசாமல், தன்னிச்சையாகவும், எதேச்சதிகாரமாகவும் வேட்பாளரை முடிவு செய்தது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பானது.
புதுவை காங்கிரஸ் கட்சி கொத்தடிமையாக செயல்படுவதை என்னைப்போன்ற உண்மையான காங்கிரஸ் உணர்வுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே காங்கிரஸ் கட்சி என்ற போர்வையில் போலியாக செயல்படும் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்கள் வகிக்கும் அனைத்து பொறுப்புகளையும், அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறோம். இதற்கான கடிதத்தை கட்சி தலைவருக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாராயணசாமியை வேட்பாளராக தேர்வு செய்ததற்கு கண்ணன் எம்.பி.யும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது ஆதராவளர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். சமீபத்தில் கண்ணன் முதல்–அமைச்சர் ரங்கசாமியை ரகசியமாக சந்தித்து பேசினார்.
எனவே அவர் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விலகியுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரும் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பார் என கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக