வியாழன், ஏப்ரல் 03, 2014

மாணவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பூசாரி கைது

குடியாத்தம், பிச்சனூர் காளியம்மன்பட்டி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 35). நெசவு தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு ஹரிப்பிரியா (7), ராஜேஸ்வரி (5) என்ற 2 மகள்கள் இருந்தனர். குடியாத்தம், பாண்டியன் நகரில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளியல் ஹரிப்பிரியா 2–ம் வகுப்பும், ராஜேஸ்வரி 1–ம் வகுப்பும் படித்து வந்தனர்.


கடந்த 2011–ம் அண்டு செப்டம்பர் மாதம் 19–ந் தேதி வழக்கம் போல் 2 பேரும் பள்ளிக்கு சென்றனர். அன்று மாலை பள்ளியில் இருந்து வெளியே சென்ற ராஜேஸ்வரி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். 2 நாட்களுக்கு பின்னர் பள்ளியில் இருந்து சற்று தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து சாக்குபையில் மூட்டையாக கட்டிய நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணையில் மாணவி பாலியல் பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்டு மூட்டையாக கட்டி கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக பள்ளிக்கு அருகில் வசித்து வந்த கோவில் பூசாரி குமார் (49) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல மாதங்களுக்கு பின்பு சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான குமார் அதன் பின்னர் தலைமறைவாக இருந்து வந்தார்.

அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் மேகநாதன், ஏட்டு தட்சிணாமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் காட்பாடி சில்க்மில் பகுதியில் மறைந்திருந்த குமாரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சுமார் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த குமாரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக