வியாழன், ஏப்ரல் 03, 2014

விசாரணை நடத்துவதற்கு மனித உரிமை ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்

போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மனித உரிமை ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது

போர்க்குற்றங்கள்
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இது குறித்து போர் நடந்த பகுதிகளில் சுதந்திரமான சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அரசு கடந்த மாதம் 27–ந்தேதி தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்ததுடன் விசாரணை நடத்த ஒத்துழைக்கப்போவதில்லை என்றும் கூறி வருகிறது. இது தொடர்பாக இலங்கை மந்திரி மகிந்தா சமரசிங்கே கூறும்போது, சர்வதேச அமைப்புகள் நடத்தும் விசாரணையில் இலங்கை அரசு கலந்து கொள்ளவும் செய்யாது. இதற்கு ஒத்துழைப்பும் அளிக்க மாட்டோம் என்றார்.
இலங்கை மந்திரியின் இந்த பேச்சு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்
இறுதிக் கட்டப்போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச அமைப்புகள் நடத்துவதற்கு மனித உரிமைகள் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீ மூன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கான முழுப்பொறுப்பும் இலங்கை அரசுக்கு இருக்கிறது என்பதையும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக