ஜெனீவா தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஆளும் கூட்டணியின் ஒரு அங்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது.
அந்தத் தீர்மானத்தை எதிர்கொண்டு
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பதால் மட்டுமே அபாண்டமான குற்றஞ்சாட்டுபவர்களை மண்ணைக் கவ்வவைக்க முடியும் என
அக்கட்சியின் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசியிடம் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாமல், விசாரணைக்கு
ஒத்துழைக்க மாட்டோம் எனக் கூறுவது குற்றம்சாட்டுபவர்கள் சொல்வதெல்லாம்
உண்மைதான் எனும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடும் எனவும் ஹஸன் அலி
கூறுகிறார்.வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை
தைரியமாக எதிர்கொண்டு அந்தக் குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிப்பதே சாலச்
சிறந்ததாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனீவாவில் வைக்கப்பட்ட
குற்றச்சாட்டுகளும் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானமும் நாட்டுக்கு எதிரானது
அல்ல, அவை இறுதிகட்ட போரின்போது குற்றமிழைத்ததாகக் கூறப்படும்
தனிநபர்களுக்கு எதிரானவையே என அவர் கூறினார்.
நாட்டிலுள்ள அனைவரையும் குற்றவாளிகளாக
ஜெனீவா தீர்மானம் காணவில்லை என்றும், போர் நிறுத்த காலமான 22.2.2002 முதல்
போர் முடிவடைந்த 19.5.2009 வரையிலான பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும்
சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும் எனவும்
ஹஸன் அலி கூறுகிறார்.
இலங்கை அரசுடன் தமது கட்சிக்கு பல
விஷயங்களில் முரண்பாடு இருந்தாலும், ஆட்சியிலிருந்து வெளியே வருவது சரியான
நிலைப்பாடு இல்லை எனவும் அவர் கூறுகிறார்.
அரசாங்கத்தின் அணுகுமுறையையே தாங்கள்
குறை கூறுவதாகவும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை எனவும் ஹஸன்
அலி மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக