ரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களை கீழே போட உக்ரைன் விதித்த ‘கெடு’ முடிந்தது. இதனால் அடுத்தது என்ன என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.
கிரிமியாவை தொடர்ந்து கிழக்கு உக்ரைனில் உள்ள மக்களும் பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். கார்கிவ், லுஹான்ஸ்க், டனட்ஸ்க் உள்ளிட்ட 3 நகரங்களில் உள்ள அரசு கட்டிடங்களை ரஷிய ஆதரவாளர்கள் ஆக்கிரமித்தனர். அவர்கள் தங்களை தாங்களே தனி குடியரசு எனவும் அறிவித்தனர்.
மேலும், ஸ்லாவியான்ஸ்க் நகரில் உள்ள போலீஸ் தலைமையகத்தை ரஷிய ஆதரவாளர்கள் கைப்பற்றி, ரஷிய கொடியை பறக்க விட்டனர். அதன் புறநகரில் ரஷிய ஆதரவாளர்களுக்கும், அரசு பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். இது உக்ரைனின் அதிபர் அலெக்சாண்டர் டுர்ச்சினோவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஸ்லாவியான்ஸ்க் நகரில் உள்ள போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட இரண்டு கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ள ரஷிய ஆதரவாளர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வெளியேற இந்திய நேரப்படி நேற்று காலை 11.30 மணி வரை அவர் கெடு விதித்தார்.
அவ்வாறு ஆயுதங்களை கீழே போடவில்லை என்றால், அவர்கள் மீது முழு அளவிலான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
மேலும், கிழக்கு உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது உக்ரைன் அதிபர் அலெக்சாண்டரும், பிற அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டுகின்றனர். கிரிமியாவில் ரஷியா நடத்தியதை கிழக்கு உக்ரைனில் நடத்த நாங்கள் அனுமதிக்க முடியாது என அதிபர் அலெக்சாண்டர் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதற்கிடையே உக்ரைன் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று முன்தினம் இரவு கூடி அவசர ஆலோசனை நடத்தியது. அப்போது கிழக்கு உக்ரைனில் உள்ள எதிர்ப்பாளர்கள் மீது உக்ரைன் அரசு படைகளை பயன்படுத்தக்கூடாது என ரஷிய தூதர் விட்டாலி சுர்கின் வலியுறுத்தினார். உக்ரைன் நேர்மையான பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக